ஏற்காட்டில் மரங்கள் சாய்ந்து மின்தடை சேலம் மாவட்டத்தில் விடிய, விடிய கொட்டிய மழை-ஒரேநாளில் 430 மில்லி மீட்டர் பதிவு

சேலம் : சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி, நேற்று காலை தொடர்ந்து பெய்த சாரல் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ஒரேநாளில் மாவட்டம் முழுவதும் 430.2 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.அசானி புயல் கரையை கடந்த நிலையில், தமிழகத்தின் பல பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் தொடர் மழை பெய்து வருகிறது. அதன்படி சேலம் மாவட்டத்தின் பல இடங்களிலும் நேற்று முன்தினம் இரவு நல்ல மழை பெய்தது.

தொடர்ந்து விடிய, விடிய பெய்த சாரல் மழை, ேநற்று காலையிலும் தொடர்ந்தது. நேற்று முன்தினம் ஒரேநாளில் மாவட்டம் முழுவதும் 430.2 மில்லிமீட்டர் மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக ஏற்காட்டில் 79 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. மேலும், காடையாம்பட்டியில் 70.4, மேட்டூரில் 54.8, இடைப்பாடியில் 33, சங்ககிரியில் 27.1, ஓமலூரில் 27, ஆத்தூரில் 22, கெங்கவல்லியில் 20, ஆணைமடுவில் 18, சேலத்தில் 17.9, தம்மம்பட்டியில் 17, பெத்தநாயக்கன்பாளயைத்தில் 17, வீரகனூரில் 16, கரியகோயிலில் 11 என்ற மில்லிமீட்டர் அளவில் பதிவாகி உள்ளது.

ஏற்காட்டில் பெய்த கனமழையால் அங்கு கடும் குளிரோடு பனிமூட்டம் நிலவியது. மலைப்பாதையில் சென்ற வாகனங்கள் தொடர்ந்து செல்ல முடியாததால் ஸ்தம்பித்து நின்று போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. இதேபோல் மஞ்சக்குட்டை உள்ளிட்ட மலைகிராமங்களில் மரங்கள் முறிந்து விழுந்து, மின்கம்பங்கள் மீது சாய்ந்ததால் மின்தடையும் நிலவியது. இதனால் பெரும்பாலான மலைகிராம மக்கள், இரவு தொடங்கி நேற்று காலைவரை மின்சாரம் இல்லாமல் பெரும் அவதிக்கு ஆளாகினர். அதேசமயம், இதமான சீதோஷ்ணநிலை நிலவுவதால் ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகள் வருகையும் அதிகரித்துள்ளது.

இதேபோல் காடையாம்பட்டி, மேட்டூர், ஆத்தூர், இடைப்பாடி, சங்ககிரி பகுதிகளிலும் பலத்தமழையால் மரங்கள் முறிந்து விழுந்தது. ஆங்காங்கே தொடர்ந்து மின்தடையும் நீடித்தது அப்பகுதி மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியது. சேலம் மாநகரை பொறுத்தவரை, நேற்று காலை சாரல் மழை தொடர்ந்து பெய்தது. இதனால், அதிகாலை நேரத்தில் காய்கறி மார்க்கெட்டுகளுக்கு வந்த வியாபாரிகளும், பொதுமக்களும் கடும் அவதியடைந்தனர்.

மேலும், பள்ளி, கல்லூரிக்கு சென்ற மாணவர்களும், அலுவலக செல்பவர்களும் மழையில் நனைந்தபடி செல்லும் நிலை காணப்பட்டது. குறிப்பாக, டூவீலரில் சென்றவர்கள் வாகனங்களை இயக்க முடியாமல் கடும் சிரமமடைந்தனர். மாவட்டம் முழுவதும் தொடர்ந்து சாரல் மழை இருந்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கோடையின் உச்சமான கத்திரி வெயில் காலத்தில், கடந்த சில நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருவதால், இதமான சீதோஷ்ண நிலை காணப்படுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: