மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா விடிய விடிய காளைகளை இழுத்த வாலிபர்கள் விவசாயம் செழிக்க சிறப்பு வழிபாடு

சத்தியமங்கலம் : ஈரோடு மாவட்டம்  புஞ்சை புளியம்பட்டியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. திருவிழாவின் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் இரவு காளை இழுக்கும் நிகழ்ச்சி  நடைபெற்றது. முன்னதாக சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள காளைகளை பிடித்து வருவதற்காக புஞ்சை புளியம்பட்டியை சேர்ந்த வாலிபர்கள் அன்னூர், சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று காளைகளை பிடித்து கொண்டு மாரியம்மன் கோவிலுக்கு வந்தனர். பின்னர் காளைகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு கோவிலை சுற்றி அழைத்து வரப்பட்டது. இதைத் தொடர்ந்து கோயில் வளாகத்தில் விடிய விடிய காளைகளை இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாரியம்மன் கோவில் முன்பு நடப்பட்ட கம்பத்தை சிவனாக பாவித்து வழிபாடு நடத்தியதாகவும், கம்பம் பிடுங்கப்பட்ட இடத்தில் காளைகளை அழைத்து வந்து நந்தீஸ்வரரை வழிபட்டு ஒரு காளையை படுக்க வைத்து ஒரு சுற்று சுற்றினால் மழை பெய்து,விவசாயம் செழித்து ஊருக்கு நன்மை பயக்கும் என்பது ஐதீகம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து கோயில் வளாகத்தில் நடந்த பறை இசை நடனம் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது.

Related Stories: