வெளிநாட்டில் இருந்து அனுமதி வராததால் சூளகிரியில் இருப்பு வைத்திருந்த 70 டன் வெங்காயம் அழுகி நாசம்-மழையால் வீணானதாக விவசாயிகள் கவலை

சூளகிரி : வெளிநாடுகளில் இருந்து அனுமதி வராததால், சூளகிரியில் இருப்பில் வைத்திருந்தி 70 டன் மருத்துவ குணம் கொண்ட சிகப்பு வெங்காயம், சூறைக்காற்றுடன் மழை பெய்த போது நனைந்து வீணாகி உள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அத்திமுகம், பேரிகை, பி.எஸ். திம்மசந்திரம் உள்ளிட்ட பகுதிகளில் சிவப்பு வெங்காயம் (ரெட் ஆனியன்) அதிக அளவில் சாகுபடி செய்து வருகின்றனர்.

இந்த வெங்காயம் மருந்து தயாரிக்கவும் மற்றும் சமையலுக்கும் உகந்தது என்பதால் வெளி நாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது. சூளகிரி சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் பல ஆண்டுகளாக சிகப்பு வெங்காயத்தை பயிரிட்டு வருகின்றனர். அறுவடை செய்த சிகப்பு வெங்காயத்தை, மூட்டைகளில் கட்டி பெங்களுரு மற்றும் சென்னையில் உள்ள வியாபாரிகளுக்கு அனுப்பி வைக்கின்றனர்.

அவர்கள் மலேசியா, சிங்கப்பூர், உக்ரைன் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு, விமானம் மற்றும் சரக்கு கப்பல் மூலமாகவும் அனுப்பி வைக்கின்றனர். இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக ரஷ்யா- உக்ரைன் போர் காரணமாக, ஐரோப்பிய நாடுகள், உக்ரைன் ஆகிய நாடுகளில் இருந்து சிகப்பு வெங்காயம் ஆர்டருக்கான பதில் ஏதும் வரவில்லை. இதனால் சூளகிரி சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 70 டன் சிகப்பு வெங்காயம் வயலில் தேங்கியது.

இவற்றை விவசாயிகள் பட்டியடித்து இருப்பில் வைத்திருந்தனர். பாதுகாப்பிற்காக தார்பாய் போட்டு மூடியிருந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சூளகிரி சுற்றுவட்டாரத்தில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக வயலில் வைத்திருந்த சிகப்பு வெங்காயம் நனைந்து அழுகத் துவங்கியது. ஒருபுறம் ஏற்றுமதிக்கான ஆர்டர் வராமலும், மற்றொருபுறம் மழையால் வெங்காயம் வீணாகியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் மூத்துராஜூ, முனிராஜ் மற்றும் புட்டப்பா கூறுகையில், ‘அறுவடை செய்யப்பட்ட சிகப்பு வெங்காயம் ஆயிரம் மூட்டைகள் களத்தில் சேமித்து வைத்திருந்தோம். சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால் வெங்காயம் சேதமடைந்தது. வங்கியில் பயிர்கடன் வாங்கி சிகப்பு வெங்காயம் விளை வித்தோம். ஆர்டர் வரும் என காத்திருந்தபோது, சூறைக்காற்றுடன் மழை வந்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான சிகப்பு வெங்காயம் நனைந்து வீணாகி உள்ளது. வேளாண் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட சிகப்பு வெங்காயத்தை நேரில் பார்வையிட்டு, அரசிடம் இழப்பீடு பெற்றுத்தர வேண்டும்,’ என்றனர்.

Related Stories: