27 ஆண்டுகளுக்கு முன் நடந்த கொலை: விமான படையை சேர்ந்த 3 அதிகாரிகளுக்கு ஆயுள்

புதுடெல்லி: கடந்த 27 ஆண்டுகளுக்கு முன் நடந்த சமையல்காரர் கொலை வழக்கில் 3 விமானப் படை அதிகாரிகளுக்கு சிபிஐ நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. குஜராத் மாநிலம், ஜாம்நகரில் உள்ள விமானப் படை தளத்தின் கேன்டீனில் கடந்த 1995ம் ஆண்டு   சமையல்காரராக பணி புரிந்தவர் கிரிஜா ராவத் (45). 1995ம் ஆண்டு கேன்டீனில் இருந்த 94 மது பாட்டில்கள் திருடு போனது. இதை ராவத் தான் திருடியிருப்பார் என்று விமானப்படை அதிகாரிகள் சந்தேகம் அடைந்தனர். அவரை தனியறையில் விசாரித்தபோது மரக்கட்டை, பெல்ட்டால் தாக்கினர். இதில், ராவத் இறந்தார். இது தொடர்பாக விமானப்படையை சேர்ந்த 3 அதிகாரிகள் உள்பட  7 பேர் மீது வழக்கு பதியப்பட்டது.

 

ஜாம்நகர் செசன்ஸ் நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக இந்த வழக்கு நடந்து வந்தது. கொலை பற்றி மீண்டும் விசாரணை நடத்தக் கோரி, குஜராத் உயர் நீதிமன்றத்தில்  ராவத்தின் மனைவி  சகுந்தலா தேவி  வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, 2017ம் ஆண்டு இந்த வழக்கு சிபிஐ.க்கு மாற்றப்பட்டது. இதில்,  அனுப் சூட், கே.என். அனில் மற்றும் மகேந்திர சிங் செராவத் குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சிபிஐ நீதிமன்றம், மூன்று பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பு அளித்தது.  2 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு நடந்து கொண்டிருந்த காலத்தில் ஒருவர் இறந்து விட்டார். மற்றொரு நபரான ஜே.எஸ்.சித்து  தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். தண்டனை பெற்ற மகேந்திர சிங் செராவத்தை தவிர மற்ற  2  அதிகாரிகளும் பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டனர்.

Related Stories: