பாரா ஒலிம்பிக் போட்டியில் மதுரை பள்ளி மாணவி 3 தங்கம் வென்று சாதனை

மதுரை: பிரேசிலில் நடந்த பாரா ஒலிம்பிக் போட்டியில் இறகுப்பந்து பிரிவில் 3 தங்க பதக்கங்களை வென்று மதுரை மாநகராட்சி பள்ளி மாணவி ஜெர்லின் அனிகா சாதனை படைத்துள்ளார்.மதுரை அவனியாபுரம் பகுதியை சேர்ந்த ஜெயரட்சகன் மகள் ஜெர்லின் அனிகா (17). மதுரை மாநகராட்சி அவ்வை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வரும் இவர், இறகுப்பந்து போட்டி உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்றுள்ளார்.

பிரேசிலில் நடைபெற்று வரும் 24வது செவித்திறன் குறைந்த மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டியில் இறகுப்பந்து பிரிவு போட்டியில் பங்கேற்றார். அதில், ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரியாவின் கே.நியூடோல்ட்டை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.கலப்பு இரட்டையர் பிரிவில் ஜெர்லின் அனிகா - அபினவ் சர்மா ஜோடி மலேசியாவின் பூன் - டியோ ஜோடியை வீழ்த்தி பதக்கம் வென்றுள்ளது. மேலும் குழு இறகுப்பந்து போட்டியிலும் தங்கம் வென்று மொத்தமாக மூன்று தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளார்.

இதுகுறித்து ஜெர்லின் அனிகாவின் தந்தை ஜெயரட்சகன் கூறுகையில் 2019ம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றார். அதேபோன்று, இந்திய அளவில் பல்வேறு தேசிய மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்றுள்ளார். உலக தரவரிசையில் 15வது இடத்தில் உள்ள ஜெர்லின், தற்போது 3 தங்க பதக்கங்களை வென்றுள்ளதால் முதல் இடத்திற்கு வருவதற்கான வாய்ப்பு உள்ளது. பாரா ஒலிம்பிக் போட்டியில் 3 தங்கம் வென்றுள்ள நிலையில் இந்திய பிரதமரை, தமிழக முதல்வரை பார்ப்பதற்காக நேரம் கேட்டுள்ளோம்’’ என்றார்.

Related Stories: