நீடாமங்கலம் அருகே வெண்ணாற்றின் குறுக்கே 40 ஆண்டுகால மூங்கில் பாலத்திற்கு விடிவு பிறக்குமா?

*கான்கிரீட் பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

நீடாமங்கலம் : நீடாமங்கலம் அருகே நல்லவளம்பேத்தி- அத்திக்கடை இடையே வெண்ணாற்றில் 40 ஆண்டுகளாக உள்ள மூங்கில் பாலத்தை அகற்றி கான்கிரீட் பாலமாக, கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றியம் அதங்குடி ஊராட்சிக்குட்பட்ட நல்லவளம்பேத்தி, ஆற்றங்கரை தெரு, வள்ளுவர் தெரு ஆகிய கிராமங்களில் சுமார் 150க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர்.

இங்குள்ள மக்கள் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கவும், வங்கி சேவைகள், பள்ளி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய தேவைகளுக்கு அங்குள்ள வெண்ணாற்றை தாண்டி கொரடாச்சேரி ஒன்றியத்தில் உள்ள அத்திக்கடைக்கு செல்ல வேண்டும். இதற்காக கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் நல்லவளம்பேத்தி கிராமமக்கள் சொந்தமாக வெண்ணாற்றில் பாலம் அமைத்து அத்திக்கடை சென்று வருகின்றனர். பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள் இந்த பாலத்தில் வந்துதான் அத்திக்கடையில் பஸ் ஏரி கொரடாச்சேரி, கூத்தாநல்லூர், திருவாரூர், மன்னார்குடி நகரங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது.

இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் இந்த பாலத்தில் மூங்கில் மூலம் அமைக்கப்பட்டுள்ள கைப்பிடியை பிடித்துக் கொண்டு பயத்துடன் சென்று வருகின்றனர். ஆட்சிகள் மாறினாலும் இந்த நிலை (மூங்கில் பாலம்) மட்டும் மாறவில்லை எந்த அரசியல் கட்சிகளும், அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை என்கின்றனர் இப்பகுதி மக்கள் வேதனையுடன்.எனவே தமிழகஅரசு கவனம் கொண்டு சிறப்பு அதிகாரிகளை சம்மந்தப்பட்ட பாலத்திற்கு அனுப்பி பார்வையிட்டு நிரந்தரமாக உள்ள மூங்கில் பாலத்தை அகற்றி புதிய சிமென்ட் கான்கிரீட் பாலம் கட்டி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஓராண்டு மட்டுமே தாக்குபிடிக்கும்

இந்த பாலமும் இல்லை என்றால் சுமார் 4 கி.மீட்டர் தூரம் வாழச்சேரி மற்றும் வெண்ணவாசல் வழியாக வந்துதான் அத்திக்கடைக்கு வர வேண்டும். இந்த மூங்கில் பாலம் ஒரு ஆண்டுதான் தாங்கும், மறுஆண்டு செலவு செய்து புதிய மூங்கில் பாலம் கட்ட வேண்டும். இந்த நிலை 40 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருகிறது.

கர்ணம் தப்பினால்.....

தற்போது மூங்கில் பாலம் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. வெண்ணாற்றில் நிறைய தண்ணீர் வரும்போது நல்லவளம் பேத்தி, ஆற்றங்கரை தெரு, வள்ளுவர் நகர் பகுதியிலிருந்து குழந்தைகளை அத்திக்கடையில் உள்ள பள்ளிக்கு அனுப்ப வேண்டுமென்றால் இந்த பாலம் வழியாகதான் செல்ல வேண்டும். அதுவும் பாலத்தின் நடுவில் பெரிய ஓட்டைகள் உள்ளது. இதில் குழந்தைகள் தவறி விழுந்தால் (கர்ணம் தப்பினால்) ஆற்றின்போக்கில் தண்ணீரில் தான் செல்ல வேண்டும். இதனால் குழந்தைகள் பள்ளி விட்டு வீடு வந்து சேரும்வரை தாய்மார்கள் வயிற்றில் நெருப்பு கட்டி அச்சத்தில் இருப்பார்கள்.

Related Stories: