எமரால்டு அணை நீர்மட்டம் சரிந்தது

ஊட்டி : நீலகிரியில் பரவலாக மழை பெய்து வந்த போதும், ஊட்டி அருகேயுள்ள எமரால்டு அணையில் நீர்மட்டம் சரிந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு, பார்சன்ஸ்வேலி உள்ளிட்ட பல்வேறு அணைகள் உள்ளன. இந்த அணைகளில் உள்ள நீரை கொண்டு 12 நீர் மின் நிலையங்களில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த அணைகளில் இருந்து மின் உற்பத்தி மட்டுமின்றி குடிநீர் உபயோகத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது.

பருவமழை சமயங்களில் இந்த அணைகள் நிரம்பி விடும். ஊட்டி அருகேயுள்ள எமரால்டு அணை உள்ளது. இந்த அணையில் உள்ள நீரை கொண்டு குந்தா, கெத்தை, பில்லூர் ஆகிய மின் நிலையங்கள் இயக்கப்படுகின்றன. நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை இயல்பை காட்டிலும் சற்று அதிகமாக பெய்தது.

இருந்தபோதும், தொடர்ச்சியாக பெய்யாமல் விட்டு விட்டு பெய்ததாலும், நீர் பிடிப்பு பகுதிகளான எமரால்டு, அவலாஞ்சி, அப்பர்பவானி உள்ளிட்ட பகுதிகளில் எதிர்பார்த்த அளவிற்கு பெய்யாததாலும் அணைகளில் நீர்மட்டம் உயரவில்லை. இருப்பினும், கணிசமான அளவு நீர் இருப்பு இருந்தது.

இந்நிலையில், கடந்த மாதத்தில் இருந்து நீலகிரி மாவட்டத்தில் பரவலாக விட்டு விட்டு நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக, ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்த நிலையில், நீர்பிடிப்பு பகுதிகளில் எதிர்பார்த்த அளவிற்கு மழை பெய்யவில்லை. இதனால், எமரால்டு மற்றும் அவலாஞ்சி அணையிலும் நீர்மட்டம் உயரவில்லை. கோடை காலமாக தற்போதும் மேகமூட்டத்துடன் கூடிய வானிலை மற்றும் மழை பெய்யும் நிலையில் அவை போதுமானதாக இல்லை. இதனால், அணைகளில் நீர்மட்டம் உயரவில்லை. மேலும், எமரால்டு அணையில் இருந்து குன்னூர் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு தினமும் நீர் எடுக்கப்படுவதால் நீர்மட்டம் வெகுவாக சரிந்துள்ளது.

Related Stories: