நாகர்கோவில் ரயில் நிலையத்தில் 100 அடி உயர கம்பத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது: பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சி

நாகர்கோவில்: நாடு முழுவதும் முக்கிய ரயில் நிலையங்களில் 100 அடி உயரமுள்ள கொடி கம்பத்தில் பெரிய அளவில் தேசிய கொடியை பறக்க விட வேண்டுமென ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி தென்னக ரயில்வேக்கு உட்பட்ட ரயில் நிலையங்களிலும் இந்த கொடி கம்பம் அமைக்கப்பட்டது. சென்னை, கோவை, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட பல நகரங்களில் உள்ள ரயில் நிலையங்களில் 100 அடி கொடி கம்பம் அமைக்கப்பட்டு, தேசிய கொடி பறக்க விடப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் கோட்டத்தில் முக்கிய ரயில் நிலையமான நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்திலும் 100 அடி கொடி கம்பம் அமைக்கும் பணி தொடங்கியது. இதற்காக பெரிய பள்ளம் தோண்டப்பட்டு அதில் கம்பம் நடப்பட்டு, சுற்றி பீடமும் அமைக்கப்பட்டது. இந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்து எலக்டரிக்கல் பணி நடைபெற்றது. சுமார் ரூ.15 லட்சம் செலவில் இந்த பணிகள் நடந்தன. இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்து இன்று காலை 100 அடி உயர தேசிய கொடி கம்பத்தில் கொடி ஏற்றப்பட்டது. திருவனந்தபுரம் உதவி கோட்ட பொறியாளர்  சரவணக்குமார் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதில் ரயில்வே அதிகாரிகள், ஊழியர்கள், ரயில்வே பாதுகாப்பு படை போலீசார், ரயில்வே போலீசார் கலந்து ெகாண்டனர்.

24 மணி நேரமும் தேசிய கொடி பறக்கும் வகையில் கம்பத்தின் உச்சியில் சிவப்பு விளக்கு பொருத்தப்பட்டுள்ளது. இந்த கொடி கம்பம் 2 டன் எடை கொண்ட இரும்பு குழாயால் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் பறக்க விடப்பட்டுள்ள கொடியின் அளவு 30 அடி நீளமும், 20 அடி அகலமும் ஆகும். இந்த கொடி சுமார் 9.5 கிலோ எடை கொண்ட துணியால் தயாரிக்கப்பட்டுள்ளது. கொடி கம்பம் நடப்பட்டு பல நாட்கள் கழித்த பின்னரே எலக்ட்ரிக்கல் பணி தொடங்கியது. மேலும் யார் இதை பராமரிப்பது என்பது தொடர்பாகவும் சர்ச்சை இருந்தது. இந்த நிலையில் ரயில்வே நிர்வாகம் இதை தொடர்ந்து பராமரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: