நடிகை பலாத்கார காட்சி அடங்கிய பென்டிரைவ் இருக்கிறதா? காவ்யா மாதவனின் லாக்கரில் 2 முறை போலீசார் சோதனை

திருவனந்தபுரம்: நடிகை காவ்யா மாதவனின் கொச்சியிலுள்ள ஒரு வங்கி லாக்கரில் குற்றப்பிரிவு போலீசார் 2 முறை சோதனை நடத்தினர். பிரபல மலையாள நடிகை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் தொடர் விசாரணையை குற்றப்பிரிவு போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக நடிகர் திலீப்பின் மனைவியும், நடிகையுமான காவ்யா மாதவனிடம் கடந்த 2 நாளுக்கு முன்பு போலீசார் விசாரணை நடத்தினர். எர்ணாகுளம் ஆலுவாவில் உள்ள திலீப்பின் வீட்டில் வைத்து சுமார் 6 மணி நேரம் விசாரணை நடந்தது. குற்றப்பிரிவு எஸ்பி மோகனசந்திரனின் தலைமையில் ஒரு குழுவினரும், பலாத்கார வழக்கை விசாரிக்கும் டிஎஸ்பி பைஜு பவுலோஸ் தலைமையில் இன்னொரு குழுவினரும் விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு கேள்விகளுக்கு காவ்யா மாதவன் பதிலளிக்காமல் மவுனமாக இருந்ததாக கூறப்படுகிறது. பலாத்கார வழக்கு குறித்து தெளிவாக தெரிந்த விவரங்களை கூட அவர் கூற மறுத்துள்ளார்.

இதற்கிடையே போலீஸ் விசாரணையில் நடிகை பலாத்கார சம்பவத்திற்கு பிறகு திலீப் கொச்சியில் ஒரு தனியார் வங்கியில் காவ்யா மாதவனின் பெயரில் ஒரு லாக்கரை திறந்தது தெரியவந்தது. இதுகுறித்து விசாரணையின்போது காவ்யா மாதவனிடம் கேட்டபோது, உண்மைதான் என்று கூறினார். நடிகையின் பலாத்கார காட்சிகளை நடிகர் திலீப், தனது வீட்டில் வைத்து பார்த்தார் என்று டைரக்டர் பாலச்சந்திரகுமார் ஏற்கனவே போலீசிடம் கூறியிருந்தார். அந்த பலாத்கார காட்சிகள் அடங்கிய பென்டிரைவ் வங்கி லாக்கரில் இருக்கலாம் என போலீசுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

நடிகை பலாத்கார சம்பவம் நடந்ததற்கு பின்னர்தான் வங்கி லாக்கர் திறக்கப்பட்டது. இதனால் போலீசின் சந்தேகம் மேலும் வலுத்தது. இதையடுத்து நேற்று வங்கிக்கு சென்ற குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து காலை, மாலையில் லாக்கரை திறந்து பரிசோதித்தனர். இதில் என்ன கிடைத்தது என்பது குறித்த விவரங்களை போலீசார் வெளியிடவில்லை. லாக்கரில் இருந்து கிடைத்த விவரங்களை வைத்து காவ்யா மாதவனிடம் மீண்டும் விசாரணை நடத்த போலீசார் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே நடிகை மஞ்சுவாரியரிடமும் போலீசார் மீண்டும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

Related Stories: