ஒகேனக்கல் வனப்பகுதியில் சுற்றித்திரியும் ஒற்றை யானை-வாகன ஓட்டிகள் பீதி

பென்னாகரம் : ஒகேனக்கல் வனப்பகுதியில் சுற்றித்திரியும் ஒற்றை யானையால், வாகன ஓட்டிகள் பீதி அடைந்துள்ளனர்.கர்நாடக மாநில வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால், அங்குள்ள யானைகள் கூட்டம், கூட்டமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி, கர்நாடக-தமிழக எல்லையான தேன்கனிக்கோட்டை, ஓசூர், சானமாவு பகுதியில் சுற்றி திரிகின்றன. இந்த யானைகள் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தன.

இந்த யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட, வனத்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், போக்கு காட்டி விட்டு, யானைகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து சுற்றி திரிகின்றன. இதில் 10க்கும் மேற்பட்ட யானைகள், ஒகேனக்கல் வனப்பகுதியில் நுழைந்தது. இந்நிலையில், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் அமைந்துள்ள முண்டச்சிபள்ளம் பகுதியில், ஒற்றை யானை சுற்றித் திரிகிறது. காலை, மாலை நேரங்களில் ஒகேனக்கல்- பென்னாகரம் சாலையை, இந்த ஒற்றை யானை கடந்து செல்வதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பீதியடைந்துள்ளனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘யானைகள் நடமாட்டத்தை வனத்துறையினர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். யானைகள் ஊருக்குள் மற்றும் விவசாய நிலங்களில் வருவதை தடுக்க, வனப்பகுதியில் உள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப வேண்டும். யானைகளுக்கு உணவாக கரும்பு சோகை, தென்னை மட்டை ஆகியவற்றை அதிக அளவில் போட வேண்டும். யானைகளை மீண்டும் கர்நாடக வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும்,’ என்றனர்.

Related Stories: