கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க குருவாயூரப்பன் சிலை எங்கே?: சயானிடம் தனிப்படை மீண்டும் விசாரணை

கோவை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான சயானிடம் தங்கத்தாலான குருவாயூரப்பன் சிலை, பத்திரங்கள் தொடர்பாக தனிப்படை போலீசார் மீண்டும் விசாரணை  நடத்தினர். கொடநாடு கொலை வழக்கு விசாரணை மீண்டும் நடத்தப்பட்டு வருகிறது. கோவை  அவிநாசி ரோட்டில் உள்ள போலீஸ் பயிற்சி வளாகத்தில் மேற்கு மண்டல ஐஜி  சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீசார் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சயானிடம் போலீசார் மீண்டும் விசாரணை நடத்தினர். சயானுக்கும்,  ஜெயலலிதா கார் டிரைவர் கனகராஜூக்கும் நெருங்கிய நட்பு இருந்தது.  

கொடநாடு கொள்ளை சம்பவத்திற்கு பின்னர் சேலத்தில் கனகராஜ் வாகன  விபத்தில் இறந்து விட்டார். இந்த விவரம் அறிந்த சயான், தன்னை கொல்ல சிலர்  முயற்சிப்பதாக கருதினார். கோவையிலிருந்து தனது மனைவி  வினுப்பிரியா, 5 வயது மகள் நீத்து ஆகியோருடன் தப்பிச்செல்ல முயன்றார்.  பாலக்காட்டில் இவர்கள் சென்ற கார் விபத்தில் சிக்கியது. இதில்  வினுப்பிரியா, நீத்து ஆகியோர் இறந்தனர். பலத்த காயங்களுடன் மருத்துவமனையில்  சேர்க்கப்பட்ட சயான் உயிர் பிழைத்தார். இந்த விபத்து கொலை திட்டமாக  இருக்கும் என சந்தேகம் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஜாமீனில் இருக்கும் சயானிடம் நேற்று  போலீசார் மீண்டும் விசாரணை நடத்தினர். கொடநாடு பங்களாவில் முன்னாள்  முதல்வர் ஜெயலலிதா அதிக எடை கொண்ட தங்கத்திலான குருவாயூரப்பன் சிலையை  வைத்து வழிபாடு நடத்தியதாக தெரிகிறது. பல கோடி ரூபாய் மதிப்பிலான இந்த சிலையை  காணவில்லை.

கொள்ளையின்போது சில பொருட்கள் மற்றும் ஆவணங்களை மூட்டையாக  கட்டி காரில் கடத்தி செல்லப்பட்டதாக தகவல் வெளியானது. எனவே சிலை தொடர்பாகவும், மூட்டையில் இருந்த  பொருட்கள், ஆவணங்கள், பத்திரங்கள் தொடர்பாகவும் போலீசார் சயானிடம் கேள்விகள் கேட்டனர். கொடநாடு பங்களாவில் இருந்த ஆவணங்கள், பத்திரங்கள், ஜெயலலிதா இறந்த பின்னர் யாரிடம் ஒப்படைக்கப்பட்டது? பொருட்களை, ஆவணங்களை  எடுத்து வர சொல்லி யார் உத்தரவிட்டார்கள்? இதன் பின்னணியில் உள்ள நபர்கள்  யார்? எனவும் கேட்டனர்.

பல கோடி ரூபாய் சொத்து ஆவணங்கள், பத்திரங்கள் எங்கே  கடத்தி செல்லப்பட்டது?, பங்களாவில் இருந்த அறைகளில் நீங்கள் என்ன பொருட்களை  தேடினீர்கள்?, என்ன பொருட்களை விட்டுச்சென்றீர்கள்? என போலீசார் விசாரித்தனர்.  இதற்கு சயான் அளித்த பதில்கள் வாக்குமூலமாக பதிவு செய்யப்பட்டது.  இந்த வழக்கில் சயானிடம் மீண்டும் நடத்தப்பட்ட  விசாரணை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: