பின்னலாடை நிறுவனங்களில் நூல் தேவை அதிகரிப்பால் பருத்தி சாகுபடியில் அரியலூர் மாவட்ட விவசாயிகள் ஆர்வம்

தா.பழூர் : சென்ற ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் அதிகப்படியான விவசாயிகள் பருத்தி சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக தா.பழூர் டெல்டா பகுதிகளில் திருமானூர், குருவாடி, முத்துவாஞ்சேரி, இடங்கண்ணி, அருள்மொழி, காரைக்குறிச்சி, வாழைக்குறிச்சி, சோழன்மாதேவி, கோடாலிகருப்பூர், தென்னவ நல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 700 ஏக்கருக்கு மேல் விவசாயிகள் பருத்தி சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது பருத்தி பூத்து காய்த்து குலுங்கி வருகிறது. இன்னும் 1 மாதத்தில் காய் பறிக்கும் தருவாயில் உள்ளது.இது குறித்து கோடாலி கருப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பருத்தி விவசாயி மின்மினி ராஜன் கூறுகையில், சென்ற ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு அதிகப்படியான விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்துள்ளனர். இதற்கு காரணம் நூல் தேவை அதிகமாக இருப்பதால் விவசாயிகள் அதிக விலை போகும் என்ற நம்பிக்கையில் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், தற்போது அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் இரட்டிப்பு விலை உயர்வு அடைந்துள்ளன.

 விவசாயம் சார்ந்த உரம், மருந்து, ஆட்கள் கூலி உள்ளிட்டவை பல மடங்கு உயர்ந்துள்ளது. மேலும் ஒரு ஏக்கர் பருத்தி விளைவிக்க சென்ற ஆண்டு ரூ.25 ஆயிரம் வரை செலவு ஆன நிலையில் இந்த ஆண்டு கடும் விலை உயர்வால் ரூ.40 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை செலவு ஆகி உள்ளதாகவும், இந்த விலை உயர்வை கருத்தில் கொண்டு குவிண்டாலுக்கு ரூ.12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை விலை உயர்வு வேண்டும்.

மேலும் சென்ற ஆண்டு பருத்தி கொள்முதல் செய்ய ஜெயங்கொண்டம் கொள்முதல் நிலையத்தில் காலம் தாழ்த்தியதால் அதிகப்படியான விவசாயிகள் தஞ்சை மாவட்டம் கொட்டையூர் பகுதிக்கு கொண்டு சென்று விற்பனை செய்தனர். பலர் விற்பனை செய்தால் போதும் என எண்ணி இடைத்தரகர்கள் இடம் குறைந்த விலைக்கு விற்பனை செய்தனர். ஆகையால், இந்த ஆண்டு காலம் தாழ்த்தாமல் பருத்தி கொள்முதல் நிலையம் துவங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: