அடிக்காசு கட்டணம் பல மடங்கு உயர்வு சண்டே மார்க்கெட் வியாபாரிகள் மறியல்-புதுச்சேரியில் பரபரப்பு

புதுச்சேரி :  அடிக்காசு கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரியில் சண்டே மார்க்கெட் வியாபாரிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரியின் முக்கிய அடையாளங்களில் சண்டே மார்க்கெட்டும் ஒன்று. காந்தி வீதியில் சாலையோரம் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் காலம், காலமாக இந்த சண்டே மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் 1000க்கும் மேற்பட்டோர் இங்கு கடைகள் போடுகின்றனர்.

தற்போது, அஜந்தா சிக்னல் முதல் புஸ்சி வீதி சின்ன மணிக்கூண்டு வரையிலும் சுமார் 2 கி.மீ. தூரம் வரையிலும் இதுபோல் கடைகள் போடப்படுகிறது. இங்கு, உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். சண்டே மார்க்கெட்டில் கடைகள் போடுவதற்காக 6 அடிக்கு ரூ.10 என புதுச்சேரி நகராட்சியானது அடிக்காசு வசூல் செய்தது. கொரோனா காலத்துக்குப்பின் இது ரூ.20 ஆக உயர்த்தப்பட்டது. இந்நிலையில் அடிக்காசு வசூலிக்கும் பணியை தனியாரிடம் நகராட்சி டெண்டர் விட்டுள்ளது.

அதேநேரம், அடிக்காசு கட்டணத்தை ரூ.200 ஆக உயர்த்தி விட்டதாக தெரிகிறது. கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியதால் சண்டே மார்க்கெட் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனை கண்டித்து ஏஐடியுசி சண்டே மார்க்கெட் வியாபார தொழிலாளர் சங்கத்தின் சார்பில் நேரு வீதி-காந்தி வீதி சந்திப்பில் நேற்று காலை திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் கவுரவ தலைவர் துரைசெல்வம், தலைவர் பாபு, செயலாளர் கார்த்திக், பொருளாளர் தயாளன் ஆகியோர் தலைமை தாங்கினர். சங்க நிர்வாகிகள் இக்பால், தோனி, பிரகாஷ், சங்கர், சிலம்பரசன், நாகராஜ் மற்றும் ஏராளமான வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

நீண்ட நேரம் நடந்த இந்த மறியலால் அவ்வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பெரியகடை இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார், மறியலில் ஈடுபட்ட சங்க நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதற்கு நகராட்சி சார்பில் அதிகாரிகள் வந்து பேசினால் தான் போராட்டத்தை கைவிடுவோம் உறுதிபட தெரிவித்து விட்டனர். இதையடுத்து வருவாய் அதிகாரி சாம்பசிவம் அங்கு வந்து சமரச பேச்சு நடத்தினார்.

கட்டண உயர்வு குறித்து உயரதிகாரிகள் முன்னிலையில் நாளை (இன்று) பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்யலாம் என உறுதியளித்தார். இதனை ஏற்று மறியலை கைவிட்டு வியாபாரிகள் கலைந்து சென்றனர். காலை 11 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடந்த இந்த சாலை மறியலால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: