ஓயா உழைப்பின் ஓராண்டு சாதனை புத்தகத்தை கலெக்டர் வெளியிட்டார்

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் அரசு துறைகளின் சார்பில் கடந்த ஒரு வருடத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள், நலத்திட்ட உதவிகள் மற்றும் சிறப்புத் திட்டங்கள் குறித்த ஓராண்டு சாதனை மலர் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி நீலகிரி மாவட்டத்தில் அரசு துறைகளின் சார்பில் கடந்த ஒரு வருடத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள், நலத்திட்ட உதவிகள் மற்றும் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்ட சிறப்புத் திட்டங்கள் ஆகியவற்றை தொகுத்து ‘ஓயா உழைப்பின் ஓராண்டு - கடைகோடித் தமிழரின் கனவுகளைத் தாங்கி நிறைவான வளர்ச்சியில் நிலையான பயணம் திராவிட மாடல் வளர்ச்சி.. திசையெட்டும் மகிழ்ச்சி” என்ற சாதனை மலரை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி, மாவட்ட கலெக்டர் அம்ரித் ஆகியோர் வெளியிட்டனர்.

தொடர்ந்து கலெக்டர் அம்ரித் நிருபர்களிடம் கூறுகையில்: நீலகிரி மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவம்,இல்லம் தேடிக் கல்வி ஆகிய திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தபடுகிறது.

குறிப்பாக மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் நமது மாவட்டத்தில் 1,01,974 பயனாளிகளுக்கு தொற்றா நோய்கள் கண்டறியப்பட்டு சிகிச்சை பெற்று பயன் பெற்றுள்ளனர். அதேபோல் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் நோய்கள் வரும்முன் அதனை தடுக்கும் பொருட்டு கடந்த ஓர் ஆண்டில் 16 முகாம்கள் நடத்தப்பட்டு 6136 நோயாளிகளுக்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ரூ.461.18 கோடி மதிப்பீட்டில் ஊட்டியில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. தற்போது முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெற்று வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளது.மாவட்ட சமூக நலத்துறை சார்பில் 10ம் வகுப்பு படித்த 270 ஏழை பெண்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.67.50 லட்சம் திருமண நிதியுதவி, ரூ.1.02 கோடி மதிப்பிலான2.16 கி.கி தங்க நாணயமும், 330 பட்டதாரி பெண்களுக்கு ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.1.65 கோடி திருமண நிதியுதவி ரூ.1.25 கோடி மதிப்பிலான 2.64 கி.கிராம் தங்க நாணயமும் வழங்கப்பட்டுள்ளது.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் மானியக் கோரிக்கையில் 200 ஆண்டுகள் கடந்த ஊட்டியினை மேம்படுத்த ரூ.10 கோடி சிறப்பு தொகையாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 1575 மனவளர்ச்சி குன்றியோருக்கு ரூ.3.12 கோடி மதிப்பில் பராமரிப்பு உதவித்தொகையும், 814 கடும் ஊனமுற்றோருக்கு ரூ.1.62 கோடி மதிப்பில் பராமரிப்பு உதவித்தொகையும் வழங்கப்பட்டுள்ளது.

ஊரக வளர்ச்சி முகமை மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாடு திட்டம் 2021-22ம் ஆண்டின் கீழ் ரூ.10.27 கோடி மதிப்பில் 11 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2021-22 ஆண்டில் 11 கிராம ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு அதில் ரூ.18.08 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

பொதுப்பணித்துறையின் சார்பில் ரூ.37.79 கோடியில் ஊட்டி காக்காத்தோப்பில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிட பணிகள் மற்றும் அடிப்படை கட்டமைப்புக்கான பணிகள் நடைபெற்று வருகிறது.ரூ.3.04 கோடியில் ஊட்டியில் ஆர்டிஒ., அலுவலக கட்டிடம் கட்டும் பணிகள் முடிவு பெற்றுள்ளது. ரூ.3.48 கோடியில் ஊட்டியில் வட்டாட்சியர் அலுவலக கட்டிடம் கட்டும் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. ரூ.2.73 கோடியில் நஞ்சநாடு கிராமத்தில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான விடுதி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று பல்வேறு துறைகளின் சார்பில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அரசின் திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அரசு திட்டங்களை பொதுமக்கள் தெரிந்து கொண்டு முழுமையாக பெற்று பயன்பெற வேண்டும், என்றார். முன்னதாக தமிழ்நாடு அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி சாதனைகள் குறித்த விளக்கப் புகைப்படக் கண்காட்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, மாவட்ட ஊராட்சித்தலைவர் பொன்தோஸ், குன்னூர் சப்.கலெக்டர் தீபனா விஸ்வேஸ்வரி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சையத் முகம்மது உட்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: