இலங்கையில் இடைக்கால அரசு அமைக்க சஜித் பிரேமதாசா மறுப்பு: அதிபர் கோத்தபயாவுக்கு நிபந்தனை

கொழும்பு: இலங்கையில் இடைக்கால அரசு அமைக்கும்படி அதிபர் கோத்தபய விடுத்த அழைப்பை, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா நிராகரித்துள்ளார். தவறான நிர்வாகத்தினால் இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தி உள்ள ராஜபக்சே சகோதரர்களான பிரதமர் மகிந்த ராஜபக்சே, அதிபர் கோத்தபய ராஜபக்சே ஆகியோரை பதவியில் இருந்து விலகும்படி வலியுறுத்தி மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல தரப்பிலும் நெருக்கடி முற்றிய நிலையில், அதிபர் மாளிகையில் நேற்று முன்தினம் சிறப்பு அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில், `இடைக்கால அரசு அமைவதால் நாட்டின் நெருக்கடி நிலைக்கு தீர்வு காணப்படும் என்றால் தான் பதவி விலக தயார்,’ என்று பிரதமர் மகிந்த ராஜபக்சே கூறியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இதனால், ராஜபக்சே விரைவில் பதவி விலகுவார் என தெரிகிறது.

இந்நிலையில், எதிர்க்கட்சியான சமகி ஜன பாலவிகயாவின் தலைவர் சஜித் பிரேமதாசா இடைக்கால அரசு அமைக்கும்படி அதிபர் கோத்தபய நேற்று முன்தினம் அழைப்பு விடுத்தார். ஆனால், இதனை ஏற்றுக் கொள்ள சஜித் பிரமேதாச மறுப்பு தெரிவித்துள்ளார். முன்னதாக, இடைக்கால அரசு அமைப்பது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா, அக்கட்சியின் பொருளாதார குருவான ஹர்ஷா டி சில்வா ஆகியோரை அதிபர் கோத்தபய தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.

அப்போது, `இலங்கை வழக்கறிஞர்கள் சங்க ஆலோசனையின்படி, அதிபருக்கு கட்டுபாடற்ற அதிகாரம் அளிக்கும் 20வது அரசியலமைப்பு சட்ட திருத்தத்தை திரும்ப பெறுதல், நாடாளுமன்றத்துக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் 19வது சட்ட திருத்தத்தை மீண்டும் அமல்படுத்துவது, அதிபர் ஆட்சி முறையை ஒழிக்கும் நடவடிக்கையுடன் இடைக்கால அரசை குறைந்தபட்சமாக 18 மாதங்கள் தொடர்ந்து செயல்பட அனுமதித்தல் உள்ளிட்ட நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால் இடைக்கால அரசு அமைப்பது பற்றி ஆலோசிக்கலாம்,’ என்று பிரேமதாசா கூறியதாக தெரிய வந்துள்ளது. பிரேமதாசாவின் நிபந்தனைகளை அதிபர் கோத்தபய ஏற்றுக் கொண்டால், இலங்கையில் இடைக்கால அரசு அமைய வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

* விடுமுறை ரத்து

இலங்கையின் பாதுகாப்பு அமைச்சகம் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில், `மீண்டும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதால், பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் பணியாற்றும் அனைத்து அதிகாரிகளின் விடுமுறையும் ரத்து செய்யப்படுகிறது,’ என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories: