அண்ணா பல்கலைக்கழக சான்றிதழ் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: அண்ணா பல்கலைக்கழக சான்றிதழ் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கல்லூரிகள் மற்றும் அதன் இணைப்புக் கல்லூரிகளுக்கான பல்வேறு சான்றிதழ் கட்டணங்களை உயர்த்தி அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதன்படி, மதிப்பெண் நகல் சான்றிதழுக்கான கட்டணம் பத்து மடங்கு, அதாவது 300 ரூபாயிலிருந்து 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதே போன்று, பட்டப் படிப்பு நகல் சான்றிதழுக்கான கட்டணம் 3 ஆயிரம் ரூபாயிலிருந்து 5 ஆயிரம் ரூபாயாகவும், இரண்டாவது முறை நகல் சான்றிதழ் பெற வேண்டுமாயின் அதற்கான கட்டணம் 10 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளன. இதற்கு 18% பொருட்கள் மற்றும் சேவைகள் வரியும் விதிக்கப்படுகிறது.

பெரும்பாலான பொறியியல் மாணவ, மாணவியர் ஏழையெளிய, நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்தவர்கள் என்பதும், வங்கிக் கடன் மூலம் தங்கள் படிப்பை தொடர்கின்றனர் என்பதும் யாவரும் அறிந்த ஒன்று. கல்விக் கட்டணத்தை செலுத்தவே சிரமப்படும் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மீது இதுபோன்ற கூடுதல் சுமையை விதிப்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. இந்த பத்து மடங்கு கட்டண உயர்வு மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுப் பெற்றுள்ளது. எனவே, முதல்வர் இதில் உடனடியாகத் தலையிட்டு, சான்றிதழ்களுக்கான கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மேலும் பிற பல்கலைக்கழகங்களும் இதுபோன்ற கட்டண உயர்வு அறிவிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: