ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது: காவல் துறை, தீயணைப்பு துறை மீதான விவாதம் தொடக்கம்; முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை பதிலுரை அளித்து முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறார்

சென்னை: சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது. காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை மானியக்கோரிக்கை மீதான  விவாதம் நடக்கிறது. நாளை பதிலுரை அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறார். தமிழக சட்டப்பேரவை கடந்த மார்ச் மாதம் 18ம் தேதி தலைமை செயலகத்தில் உள்ள பேரவை கூடத்தில் கூடியது. அன்றைய தினம் 2022-2023ம் ஆண்டுக்கான பட்ஜெட்டும், 19ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து கடந்த மாதம் 6ம் தேதி முதல் துறை ரீதியான மானியக்கோரிக்கை மீதான விவாதம் தொடங்கி நடந்து வருகிறது.

கடைசியாக கடந்த சனிக்கிழமை 7ம் தேதி திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை, பொதுத்துறை, சிறப்பு திட்ட செயலாக்கத் துறை, மாநிலச் சட்டமன்றம், ஆளுநர் மற்றும் அமைச்சரவை, நிதித்துறை, மனிதவள மேலாண்மைத்துறை, ஓய்வூதியங்களும், ஏனைய ஓய்வுகால நன்மைகளும் ஆகிய துறைகளின் மீதான விவாதம் நடைபெற்றது. இதற்கு பதில் அளித்து அமைச்சர்கள் முறையை துரைமுருகன், பழனிவேல் தியாகராஜன் மற்றும் செஞ்சி மஸ்தான் ஆகியோர் புதிய அறிவிப்புகளை வெளியிட்டனர்.

தொடர்ந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சட்டப்பேரவைக்கு விடுமுறை விடப்பட்டது. ஒரு நாள் விடுமுறைக்கு பின்னர் மீண்டும் சட்டசபை இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது. கூட்டம் தொடங்கியதும் கேள்வி நேரம் எடுத்து கொள்ளப்படும். அதில் உறுப்பினர்கள் கேள்விக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள். பின்னர், காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெறும். விவாதத்திற்கு பதில் அளித்து துறை சார்ந்த அமைச்சரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் நாளை பதில் அளித்து பேசுவார்.

தொடர்ந்து புதிய அறிவிப்புகளை அவர் வெளியிடுவார். இதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை முதல்வர் வெளியிட வாய்ப்பு உள்ளது. இதனால் முதல்வரின் துறை மீதான மானியக் கோரிக்கை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் 110 விதியின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நாளை முதல்வர் பதிலுரைக்கு பிறகு அரசினர் சட்டமுன்வடிவுகள் ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். அதைத் தொடர்ந்து சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படும்.

Related Stories: