வேலூர் மத்திய சிறையில் 8வது நாளாக முருகன் உண்ணாவிரதம்

வேலூர்: முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில், 7 பேரில் பேரறிவாளன் மற்றும் முருகன் மனைவி நளினி ஆகியோர் பரோலில் உள்ளனர். முருகன் மனைவி நளினியின் பரோல் 4வது மாதமாக தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் முருகனும் தனக்கு 6 நாள் பரோல் வழங்க வேண்டும் என்று கடந்த ஆண்டு ஏப்ரல் 8ம் தேதி சிறைத்துறையிடம் மனு அளித்தார்.

இந்த மனுவை பாகாயம் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ள 2 வழக்குகளை காரணம் காட்டி சிறைத்துறை கடந்த ஏப்ரல் 8ம் தேதி நிராகரித்ததுடன், அதுதொடர்பான காரணம் அடங்கிய கடிதத்தையும் முருகனுக்கு வழங்கியது. இதையடுத்து தனக்கு பரோல் வழங்க கேட்டு முருகன் வேலூர் சிறையில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவரது உண்ணாவிரதம் இன்று 8வது நாளாக தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று காலை வழக்கறிஞர் புகழேந்தி சிறையில் முருகனை சந்தித்து பேசினார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம், உண்ணாவிரதம் காரணமாக முருகன் சோர்ந்துள்ளதாகவும், 6 பாட்டில் குளுக்கோஸ் ஏற்றப்பட்டதாகவும் தெரிவித்தார். அதேநேரத்தில் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக தெரிவிக்கும் அனுமதி கடிதத்தை சிறைத்துறை நிர்வாகத்திடம் முருகன் இதுவரை வழங்கவில்லை. அவருக்கு வழங்கப்படும் படிகளை அவர் வாங்கவில்லை.

ஆனால், அவரது அறையில் நொறுக்குத்தீனிகள் உள்ளன. மேலும் அவர் கீரை வகைகளை நெய்யுடன் சேர்த்து எடுத்துக்கொள்கிறார். தண்ணீரும் தொடர்ந்து வழங்கப்படுகிறது. மருத்துவ பரிசோதனையும் செய்யப்படுகிறது. அவர் நல்ல நிலையில் உள்ளார் என்று சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: