ஊட்டியில் குவியும் சுற்றுலா பயணிகள்: அனைத்து சாலைகளும் ஸ்தம்பித்தது

ஊட்டி: கேரள  மாநில சுற்றுலா பயணிகள் நேற்று ஊட்டியை முற்றுகையிட்ட நிலையில், அனைத்து சாலைகளிலும் வாகனங்கள் அணி வகுத்து நின்றதால் போக்குவரத்து  ஸ்தம்பித்தது. நீலகிரி மாவட்டத்திற்கு நாள் தோறும் ஏராளமான சுற்றுலா  பயணிகள் வருகின்றனர்.குறிப்பாக, வார விடுமுறை நாட்கள் மற்றும் தொடர்  விடுமுறை நாட்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவதை தற்போது வாடிக்கையாக  கொண்டுள்ளனர். கோடை சீசன் துவங்கிய நிலையில், கடந்த ஒரு மாதமாக ஊட்டி வரும்  சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவு காணப்பட்டது. இந்நிலையில், ரமலான்  பண்டிகையை முன்னிட்டு கேரள மாநிலத்தில் 3 நாட்கள் விடுமுறை என்பதால்,  தற்போது ஏராளமான கேரள மாநில சுற்றுலா பயணிகள் ஊட்டியை  முற்றுகையிட்டுள்ளனர். அதேசமயம் தமிழகத்தின் பிறபகுதிகளில் இருந்தும்  ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதனால், மைசூர் -  ஊட்டி சாலைகளில் வாகனங்கள் அணி வகுத்து நின்றன.

அதேபோல், பூங்கா  செல்லும் சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்ட போதிலும், இச்சாலையில்  வாகனங்கள் அணி வகுத்து நின்றன. குறிப்பாக, தொட்டபொட்டா, பைக்காரா,  தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா செல்லும் சாலைகளிலும் வாகனங்கள் அணி வகுத்து  நின்றன.ஊட்டி - குன்னூர் சாலையில் தலையாட்டு மந்து முதல் நகருக்குள் வர 2  கி.மீ. தூரத்தை ஒரு மணி நேரம் ஆனது. அனைத்து சாலைகளிலும் வாகனங்கள்  அணிவகுத்தே சென்றன. நகரின் முக்கிய சாலையான கமர்சியல் சாலை, பூங்கா  செல்லும் சாலையில் அணி வகுத்து நின்ற வாகனங்களால் போக்குவரத்து நெரிசலில்  காணப்பட்டது. மேலும், அனைத்து சுற்றுலா தலங்களிலும் மக்கள் கூட்டம்  அலைமோதியது. ஊட்டியில் ஏரியில் பல மணி நேரம் காத்திருந்தே சுற்றுலா பயணிகள்  நேற்று படகு சவாரி மேற்கொள்ள முடிந்தது. நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்த நிலையில், ஊட்டி மட்டுமின்றி அனைத்து லாட்ஜ் மற்றும் காட்டேஜ்களிலும் அறைகள் நிரம்பி வழிந்தன.

Related Stories: