அக்னி நட்சத்திரம் இன்று துவங்கியது; திருச்சி, பெரம்பலூரில் சூறாவளி காற்றுடன் கனமழை: மரங்கள் சாய்ந்து அரசு பஸ், கார் சேதம்

திருச்சி: தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் இன்று துவங்கியது. இந்நிலையில் நேற்று திருச்சி, பெரம்பலூரில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதில் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து மின்கம்பி, அரசு பஸ், கார் சேதமடைந்தது. இதேபோல் திருச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களில் காலை முதலே வெயில் கொளுத்தியதால் மக்கள் அவதிக்குள்ளாகினர். தமிழகத்தில் வட கிழக்கு பருவமழையின்  காலம் முற்றிலும் முடிந்து தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளது. கோடையை கத்திரி துவங்கும் முன்பே,  தமிழகத்தில் தற்போது 113 டிகிரி வெயில்  உச்சத்தை தொட்டுள்ளது.

இது மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப, இன்று முதல் கத்திரி வெயில் காலம் தொடங்கியது. இந்த கோடையில், வெயில் இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ்  கூடுதலாக காணப்படும். இந்நிலையில், தமிழகத்திலும், நேற்று 108 டிகிரி வெயில் நிலவியது. கரூர், மதுரை, தஞ்சாவூர், திருச்சி 104 டிகிரி வெயில் நிலவியது. கத்திரி 25 நாளுக்கு இருக்கும். இந்நிலையில் அக்னி நட்சத்திரம் துவங்கிய முதல் நாளான  இன்று காலையில் முதலே தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில்  வெயில் மற்றும் வெப்பம் அதிகரித்து வாட்டத் தொடங்கிவிட்டது.

சாலைகளில் செல்லும் போது அனல் காற்று வீசுகிறது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பல இடங்களில் வெப்பசலனம் காரணமாக மழை பெய்தது. பெரம்பலூரில் நேற்று காலை வெயில் கொளுத்திய நிலையில், மாலை 3.30 மணியளவில் நகரில் சூறாவளி காற்றுடன் பலத்தமழை பெய்தது. சூறைக்காற்றால் பெரம்பலூரை சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட மரங்கள் வேறோடு சாய்ந்தது. வேலூர் ஊராட்சிக்கு உட்பட்ட  கீழக்கணவாய் முல்லை நகர் காலனிப் பகுதியில் பலத்த காற்று வீசியதால் சிவம்மாள் என்பவரது வீட்டின் அருகேயிருந்த மரம் குடியிருப்பு மற்றும் மின்கம்பி மீது விழுந்தது. இதில் அவரது வீட்டின் ஆஸ்பெட்டாஸ் மேற்கூரை சேதமடைந்தது.

இதில் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் இல்லை. இதேபோல் நடுவயல் கிராமத்தில் நேற்று அடித்த பலத்த காற்றில் நித்யா என்பவரது வீட்டு மேற்கூரை காற்றில் பறந்தது. மழை காரணமாக வெப்பம்  குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. திருச்சி மாவட்டம் துறையூரில் நேற்று மாலை திடீரென பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் துறையூரில் பஸ் நிலையம், போலீஸ் நிலையம், துறையூரில் இருந்து முசிறி செல்லும் சாலை, ஆத்தூர் செல்லும் சாலை ஆகிய பகுதிகளில் சாலையின் குறுக்கே ராட்சத புளியமரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன.

இதில் நரசிங்கபுரத்தில் இருந்து துறையூர் நோக்கி வந்்த அரசு பஸ் மீது மரத்தின் கிளை விழுந்ததில், பஸ்சின் முன்பக்க கண்ணாடி முழுவதும் உடைந்தது. உடனடியாக டிரைவர் பிரேமானந்த் சாமர்த்தியமாக பஸ்சை நிறுத்தினார். உடைந்த கண்ணாடி துண்டுகள் பயணிகள் மீது தெறித்தன. இருப்பினும் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதேபோல் துறையூரில் உள்ள சிவன் கோயிலின் பெயர் பலகை சூறாவளி காற்றில் சாய்ந்தது. துறையூர் மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள கிராமங்களில் சூறாவளி காற்றின் காரணமாக வீடுகள் சேதம் அடைந்தன.

 

துறையூர் தீயணைப்பு நிலைய அலுவலர் அறிவழகன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் நகரில் விழுந்து கிடந்த மரங்களை அப்புறப்படுத்தினார்கள். மரங்கள் சாய்ந்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, துறையூர் நகரம் முழுவதும் இருளில் மூழ்கியது. தா.பேட்டை பகுதியில் நேற்று பலத்த காற்றுடன் கோடை மழை பெய்தது. இதனால் பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. வயல்வெளிகளில் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி; தமிழகத்தில் 4 நாட்கள் மழை

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக இன்று நாளை (5ம் தேதி), 6ம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 5ம் தேதி கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

7ம்தேதி டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய கடலூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்கள், காரைக்கால், மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய ஈரோடு, கரூர், மதுரை மாவட்டங்கள், கன்னியாகுமரி, திருநெல்வேலி, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய தெரிவித்துள்ளது.

Related Stories: