பிப். 12ல் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை மீறி சமஸ்கிருதத்தில் உறுதிமொழி எடுத்த அனைத்து கல்லூரிகள் மீது நடவடிக்கை: மருத்துவக்கல்லூரி இயக்குநர் நாராயண பாபு பேட்டி

மதுரை: மருத்துவக்கல்லூரியில் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி எடுத்துக்கொண்ட அனைத்து மருத்துவக்கல்லூரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவக்கல்லூரி இயக்குநர் நாராயண பாபு கூறியுள்ளார். மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வெள்ளை அங்கி அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில், வழக்கமான இப்ரோகிரேடிக் உறுதிமொழியை எடுப்பதற்கு பதிலாக மகரிஷி சரத் சப்த் என்ற சமஸ்கிருத உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. சம்பவம் தொடர்பாக மருத்துவக்கல்லூரி டீன் ரத்தினவேல் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக  விசாரணை நடத்த மருத்துவக்கல்லூரி இயக்குநர் நாராயண பாபு நியமிக்கப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த மருத்துவக்கல்லூரி இயக்குநர் நாராயணபாபு தலைமையில், திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி டீன் ராஜேந்திரன் மற்றும் 2 அதிகாரிகள் என 4 பேர் குழுவினர் மதுரை மருத்துவக்கல்லூரிக்கு நேற்று வந்தனர். அங்கு கல்லூரி முதல்வர் அறையில், முன்னாள் டீன் ரத்தினவேல், துணை முதல்வர் தனலெட்சுமி, மாணவர் அமைப்பு தலைவர் ஜோதிஸ் குமாரவேல், மாணவர் ஒருங்கிணைப்பு அமைப்பாளர், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த மருத்துவ அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணையை மேற்கொண்டனர்.

விசாரணைக்கு பின் நிருபர்களிடம் இயக்குநர் நாராயணபாபு கூறுகையில், ‘‘முன்னாள் டீன், துணை முதல்வர், மாணவர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தியுள்ளோம். விசாரணை குறித்து அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும். தவறுதலாக சமஸ்கிருத உறுதிமொழி எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தவறுதலாக பதிவிறக்கம் செய்துள்ளனர். தேசிய மருத்துவ ஆணையம் அனுப்பியது சுற்றறிக்கை மட்டுமே. உத்தரவு அல்ல. கடந்த பிப்.10ம் தேதி சுகாதாரத்துறை செயலாளர் அனைத்து மருத்துவக்கல்லூரி முதல்வர்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில், தேசிய மருத்துவ ஆணைய நடவடிக்கைகளை அப்படியே பின்பற்ற வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளார். அதனை மதுரை மருத்துவக்கல்லூரி மீறிவிட்டது. தவறுதலாக உறுதிமொழி எடுத்த அனைத்து கல்லூரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். விசாரணை அறிக்கையின் அடிப்படையில் அரசு முடிவு எடுக்கும்’’ என்றார்.

Related Stories: