மும்பையில் இருந்து ஆன்லைனில் போதை மாத்திரைகளை வாங்கி கல்லூரி மாணவர்களுக்கு சப்ளை: 2 பேர் கைது

சென்னை: மும்பையில் இருந்து ஆன்லைனில் போதை மாத்திரைகளை வாங்கி கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். மதுரவாயல் பகுதியில் கடந்த மாதம் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை விற்பனை செய்ததாக மதுரவாயல் போலீசார் 2 பேரை கைது செய்தனர். அவர்கள் அளித்த தகவலின்பேரில் அண்ணாநகர் துணை கமிஷனர் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று மதுரவாயல் கந்தசாமி நகரில் பதுங்கியிருந்த சென்னை, கே.கே.நகரை சேர்ந்த சக்திவேல் (22), ராமாபுரத்தைச் சேர்ந்த சிவா (22) ஆகியோரை மடக்கி பிடித்தனர்.

அப்போது அவர்களிடம் தடை செய்யப்பட்ட 300 போதை மாத்திரைகள் இருப்பது தெரியவந்தது. இருவரையும் பிடித்து மதுரவாயல் போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்து மும்பையிலிருந்து வரவழைத்து ஒரு மாத்திரையை ரூ.250க்கு கல்லூரி மாணவர்களிடம் விற்பனை செய்து வந்துள்ளனர். குறிப்பாக கல்லூரி மாணவர்களை குறிவைத்து இந்த போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வந்தது தெரியவந்துள்ளது. மேலும் இவர்களிடம் இருந்து 300 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் கைது செய்தனர். மேலும் இதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: