பாகிஸ்தானில் ‘பொம்மை’ ஆட்சியை நடத்தும் அமெரிக்கா; ஜோ பிடனை மீண்டும் தாக்கிய இம்ரான் கான்

இஸ்லாமாபாத்: முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக வழக்குகள் போடப்படும் நிலையில், பாகிஸ்தானில் பொம்மை ஆட்சியை அமெரிக்கா நடத்துவதாக நேரடியாக தாக்கி பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு  முன் சவூதி அரேபியாவின் மதீனாவிற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்  மற்றும் அவரது தூதுக்குழுவினர் சென்றனர். அப்போது அவர்களை பார்த்து  அங்கிருந்த பாகிஸ்தானை சேர்ந்த சிலர், ‘திருடர்கள், துரோகிகள்’ என்று  கோஷமிட்டனர். இவர்கள் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின்  ஆதரவாளர்கள் என்பது தெரியவந்தது.

அதையடுத்து சவூதி அரேபியா போலீசார்,  பாகிஸ்தானை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். இவர்கள்  இம்ரான்கானின் உத்தரவின் பேரில், மதீனாவில் பிரதமருக்கு எதிராக கோஷம்  எழுப்பப்பியதாக கூறப்பட்டது. மேலும், இம்ரான் கான் உட்பட 150க்கும் மேற்பட்டோர் மீது பாகிஸ்தானின் பைசலாபாத் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதனால், இம்ரான் கான் எந்த நேரத்திலும் கைது செய்யப்படுவார் என்று பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரானா சனாவுல்லா சார்பில் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் தனியார் சேனலுக்கு பேட்டியளித்த இம்ரான் கான், ‘ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரை, அமெரிக்க அதிபர் ஜோ பிடன் சதிசெய்து பதவி நீக்கம் செய்தார்.

அவர் தற்போது பொம்மை அரசை அமைத்துள்ளார்’ என்று கூறினார். முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன் ஃபாக்ஸ் நியூஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமெரிக்க பாதுகாப்பு ஆய்வாளர் டாக்டர் ரெபேக்கா கிரான்ட்டின் அளித்த பேட்டியில், ‘பாகிஸ்தான் உக்ரைனை ஆதரிக்க வேண்டும்; ரஷ்யாவுடனான ஒப்பந்தங்களை ரத்து செய்ய வேண்டும். சீனாவுடனான உறவை குறைக்க வேண்டும். அமெரிக்க எதிர்ப்புக் கொள்கைகளை நிறுத்த வேண்டும்’ என்று இம்ரான் கானுக்கு எதிராக பேசியிருந்தார். அதன் தொடர்ச்சியாக தற்போது அமெரிக்காவை இம்ரான் நேரடியாக தாக்கி பேட்டி அளித்துள்ளார்.

Related Stories: