அடுத்தடுத்து வழக்கு போடும் பாக். அரசு கைதாகிறார் இம்ரான் கான்: தொடர்ந்து குடைச்சல் தருவதால் அதிரடி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பொறுப்பேற்றுள்ள புதிய அரசுக்கு தொடர்ந்து குடைச்சல் தருவதால், முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது அடுத்தடுத்து வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. இந்த வழக்குகளில் அவர் எந்த நேரத்திலும் கைதாவார் என அமைச்சர் கூறி உள்ளார்.

பாகிஸ்தான் பிரதமராக ஷெபாஸ் ஷெரீப்  கடந்த மாதம் 11ம் தேதி பதவியேற்றார்.  ஷெபாஸ் ஷெரீப் தனது முதல்வெளிநாட்டு பயணமாக  சவுதி அரேபியாவுக்கு சமீபத்தில் சென்று இருந்தார். ஷெபாஸ் தலைமையில் பாகிஸ்தான் குழுவினர் மெதினாவுக்கு சென்றனர்.  அப்போது இம்ரான்கானின் ஆதரவாளர்கள் ஷெபாஸ் ஷெரீப்பை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  ஷெரீப்பை ‘திருடர்’, ‘துரோகி’ என கூறி அவர்கள் கோஷம் எழுப்பினர்.  இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான்  போலீசார் இம்ரான்கான் மற்றும் முன்னாள் அமைச்சர்கள்  உள்பட 150 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் இம்ரான்கானுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்தால் அவர் கைது செய்யப்படுவார் என பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ராணா சனாவுல்லா தெரிவித்தார்.

இந்நிலையில், பாகிஸ்தான் தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சர் மரியம் அவுரங்கசீப் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘இம்ரான் கான் பதவியில் இருந்தபோது, அரசாங்க  காரை எடுத்து கொண்டார்.  ஆடம்பர பிஎம்டபிள்யு புல்லட் புரூப் காரின் மதிப்பு ரூ.6  கோடியே 15 லட்சம் ஆகும்.  வெளிநாட்டு அரசியல் தலைவர்கள் வரும் போது பாகிஸ்தான் வரும்போது பயன்படுத்த இந்த கார் வாங்கப்பட்டது. பிரதமர் அலுவலக கட்டுப்பாட்டில் இருந்த பிஎம்டபிள்யு காரை இம்ரான் கான் எடுத்து கொண்டார்’’ என்றார். ஷெபாஸ் அரசுக்கு தொடர்ந்து குடைச்சல் தருவதால் இம்ரான் மீது அடுத்தடுத்து வழக்குகள் பாய்கின்றன. அவர் ரம்ஜான் பண்டிகைக்கு முன்பாகவோ, அடுத்த நாளோ கைதாவார் என அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

நவாஸ் தண்டனை ரத்தா?: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் அண்ணனான நவாஸ் ஷெரீப் ஏற்கனவே பாகிஸ்தான் பிரதமராக இருந்தவர். கடந்த 2018ம் ஆண்டு ஊழல் வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை பெற்ற நவாஸ் ஷெரீப் மருத்துவ சிகிச்சைக்காக லண்டன் சென்றவர் பின்னர் நாடு திரும்பவில்லை. இந்நிலையில், பாகிஸ்தானில் ஆட்சி மாற்றத்திற்கு பின் தற்போது நவாஸ் ஷெரீப்புக்கு விதிக்கப்பட்ட  சிறை தண்டனையை ரத்து செய்வது பற்றி அரசு பரிசீலித்து வருகிறது. இதுகுறித்து அமைச்சர் சனாவுல்லா கூறுகையில், ‘‘நவாஸ்க்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய பாகிஸ்தான்  மற்றும் பஞ்சாப் மாகாண அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது. வேண்டுமென்றே தன் மீது ஊழல் வழக்கு போடப்பட்டுள்ளதாக கூறி நவாஸ் ஷெரீப் நீதிமன்றத்தில் முறையீடு செய்யலாம்’’ என்றார்.

Related Stories: