கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு; மாஜி அதிமுக எம்எல்ஏ பி.ஏ.விடம் தனிப்படை மீண்டும் விசாரணை

கோவை: நீலகிரியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் உள்ளது. இங்கு கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி இரவு 10 பேர் கொண்ட கும்பல் உள்ளே புகுந்து காவலாளி ஓம்பகதூர் என்பவரை கொலை செய்து விட்டு பொருட்கள் மற்றும் ஆவணங்களை கொள்ளையடித்து சென்றனர். இது தொடர்பாக சயான், சதீசன், உதயகுமார், ஜம்சிர் அலி, தீபு, சந்தோஷ், திலிப் ஜாய், வாளையார் மனோஜ், மனோஜ் உள்ளிட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கு தொடர்பாக இதுவரை 200க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடைபெற்றுள்ளது.

கடந்த சில நாட்களாக கோவை அவிநாசி ரோட்டில் உள்ள போலீஸ் பயிற்சி வளாகத்தில் ஐஜி சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீசார் அதிமுக பிரமுகர்கள் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இன்று கோவை போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் முன்னாள் எம்.எல்.ஏ ஆறுக்குட்டியின் உதவியாளர் நாராயணசாமியிடம் காலை 11 மணி முதல் விசாரணை நடைபெற்று வருகிறது. இவரிடம் கடந்த 10 நாட்களுக்கு முன்பு விசாரணை நடைபெற்றது.

தற்போது 2வது முறையாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கொடநாடு கொலை, கொள்ளை நடந்த சில நாட்களில் நடந்த விபத்தில் ஜெயலலிதா கார் டிரைவர் கனகராஜ் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். அவர் அதிமுக மாஜி எம்.எல்.ஏ. ஆறுக்குட்டியிடமும் டிரைவராக பணியாற்றி உள்ளார். அப்போது, அவர் ஆறுக்குட்டியின் உதவியாளர் நாராயணசாமியிடம் பல முறை செல்போனில் பல மணி நேரம் பேசியுள்ளதாக தெரிகிறது. அதன் அடிப்படையில், அவரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: