முதல் கும்கி ஆபரேஷனுக்காக டாப்சிலிப்பில் இருந்து சின்னதம்பி காட்டு யானை திண்டுக்கல் பயணம்

ஆனைமலை: கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள கிராமப்பகுதிகளில் அட்டகாசம் செய்து வந்த சின்னதம்பி எனும் காட்டு யானை கடந்த 2019ம் ஆண்டு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. இந்த யானைக்கு வனத்துறையினர் கடந்த 2 ஆண்டுக்கும் மேலாக கும்கி பயிற்சி அளித்தனர். தற்போது முதல் முறையாக சின்னதம்பியை காட்டுயானை விரட்டும் பணிக்காக வனத்துறையினர் திண்டுக்கல் அழைத்து சென்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி பகுதியில் பயிர்களை சேதப்படுத்தும் காட்டு யானையை விரட்டும் பணிகள் வனத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக, ஆனைமலை புலிகள் காப்பகம், டாப்சிலிப் அருகே உள்ள கோழிகமுத்தி முகாமில் இருந்து நேற்று முன்தினம் கும்கி யானை கலீம் மற்றும் பாகன்கள் அடங்கிய குழு திண்டுக்கல் புறப்பட்டு சென்றனர். காட்டு யானையை விரட்டும் பணிக்காக கோழிகமுத்தி முகாமிலிருந்து நேற்று சின்னத்தம்பி யானை அனுப்பி வைக்கப்பட்டது.

வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘கோவையிலிருந்து கடந்த 2019ம் ஆண்டு பிடிக்கப்பட்ட சின்னத்தம்பி யானைக்கு வரகளியாறு முகாமில் வைத்து 2 ஆண்டுகள் தொடர் பயிற்சி அளித்து, பாகன்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தோம். இதன் பின் கோழிகமுத்தி முகாமிற்கு கொண்டு வரப்பட்டு பராமரித்து வந்த நிலையில், சின்னத்தம்பி யானை நன்கு பயிற்சி பெற்று உள்ளதால், தற்போது திண்டுக்கல்லில் நடக்கும் காட்டு யானையினை விரட்டும் கும்கி ஆபரேஷனுக்கு முதல் முறையாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சின்னத்தம்பி யானையுடன் அதன் பாகன்களான தர்மதுரை மற்றும் காளியப்பன் மற்றும் வனத்துறை குழுவினர் திண்டுக்கல் புறப்பட்டு சென்றனர்’’ என தெரிவித்தனர்.

Related Stories: