கொளுத்தும் கோடை வெயிலுக்கு இதமாக திருநள்ளாறு கோவில் யானை குளத்தில் கும்மாள குளியல்

காரைக்கால் : திருநள்ளாறு கோவில் யானை வெயிலின் தாக்கத்தால் குளத்தில் குளித்து குதூகலம் அடைந்தது. பாகன் உடன் சேர்ந்து நீரில் மூழ்கி மூழ்கி விளையாண்ட மகிழ்ச்சியில் குழந்தை போல் குளத்தை விட்டு வெளியேறாமல் அடம் பிடித்ததை அங்கு இருந்த குழந்தைகள் கண்டு ரசித்தனர்.புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உலக பிரசித்தி பெற்ற திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர், சனிஸ்வர பகவான் கோவிலில் பிரணாம்பிகை எனும் 17 வயது பெண் யானை உள்ளது.

திருவிழா மற்றும் முக்கிய நிகழ்வுகள் மற்றும் பூஜைகளில் கோவில் யானை பிரணாம்பிகை கலந்து கொண்டு பொதுமக்களுக்கு ஆசீர்வாதம் வழங்கி வருகிறது. மேலும் சிறப்பு நாட்களில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் சனீஸ்வர பகவானை தரிசனம் செய்து யானையிடம் ஆசீர்வாதம் பெறுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. மேலும் யானை திருநள்ளாறு பகுதி மக்களிடம் செல்ல குழந்தையாகவே பழகி வருகிறது.

பிரணாம்பிகை யானை தினமும் காலை மற்றும் மாலை இரு வேளை கோவிலின் சரஸ்வதி தீர்த்தக் குளத்தில் குளிக்க வைக்கப்பட்டு வருகிறது. தற்போது காரைக்காலில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து சூரியன் சுட்டெரித்து வருகிறது. வெயிலில் தாக்கத்தைக் தணிப்பதற்காக தீர்த்தக் குளத்தில் கூடுதலாக மதிய வேளையிலும் பிரணாம்பாள் யானையை குளிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள பிரணாம்பிகை யானை சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக குளத்தை விட்டு வெளியேறாமல் குத்தாட்டம் போடுகிறது. இதனை நாள்தோறும் அப்பகுதியில் உள்ள குழந்தைகள் கண்டு ரசிக்கிறார்கள்.

Related Stories: