சேலம் அரசு மருத்துவமனையில் ஓரம் கட்டப்படும் பேட்டரி வாகனங்கள்-நோயாளிகள் அவதி

சேலம் : சேலம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளை அழைத்து செல்லும் பேட்டரி வாகனங்களை முறையாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

சேலம் அரசு மருத்துவமனையில் தினமும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புறநோயாளிகளும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள் நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர். பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, எலும்பு, கண், இருதயம், மகப்பேறு உள்ளிட்ட 37 பிரிவின் கீழ் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெறும் உள் நோயாளிகளுக்கு எக்ஸ்ரே, எம்ஆர்ஐ, ரத்த பரிசோதனை, பிறந்த குழந்தைகளுக்கு இருதய பரிசோதனை உள்ளிட்டவை மேற்கொள்ளப்படுகிறது.

இதற்காக நோயாளிகளை வார்டுகளில் இருந்து பரிசோதனைக்காக சூப்பர் ஸ்பெஷாலிட்டி கட்டிடத்திற்கு அழைத்து வர 3 பேட்டரி வாகனங்கள் இயக்கப்படுகிறது. இந்த வாகனங்களை தனியார் அமைப்பு வழங்கியுள்ளது. காலை நேரங்களில் சுமார் 2 முதல் 3 மணி நேரம் மட்டுமே இவை இயக்கப்படுகிறது. மீதமுள்ள நேரங்களில் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது, வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், மகப்பேறு, பொது மருத்துவம் உள்ளிட்ட வார்டுகளில் இருந்து நோயாளிகள் பரிசோதனைக்கு நடந்தே செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.

மேலும், வெயிலின் தாக்கத்தினால் நோயாளிகள் பலர் நடந்தே செல்வதால், மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். காலில் அடிபட்டு வரும் நோயாளிகள் நடந்தே செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் பேட்டரி வாகனங்களை அனைத்து நேரங்களிலும் முறையாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து நோயாளிகள் கூறுகையில், ‘‘மருத்துவமனைக்கு தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்கு வருகின்றனர். இங்கு பல பரிசோதனைகளுக்கு நோயாளிகள் அழைத்து செல்லப்படுகின்றனர். நோயாளிகளை அழைத்துச் செல்ல பேட்டரி வாகனங்கள் இருந்தும், அதனை முறையாக பயன்படுத்தப்படவில்லை. தற்போது, வெயில் காலம் என்பதால் நோயாளிகளை அழைத்து செல்ல பேட்டரி வாகனங்களை பயன்படுத்த வேண்டும்,’’ என்றனர்.

Related Stories: