தம்மம்பட்டி அருகே உலிபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு-முன்னேற்பாடுகள் குறித்து கலெக்டர் ஆய்வு

தம்மம்பட்டி : தம்மம்பட்டி அருகே, உலிபுரம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கிறது. இதற்கான முன்னோற்பாடுகளை கலெக்டர் அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே உலிபுரம் கிராமத்தில், ஆண்டு தோறும் சித்திரை மாதம் பாம்பலம்மன் பொங்கல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம்.

இதனிடையே கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கிற்கு பின்பு இப்போது 79ம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடுகளில் விழாக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர், ஜல்லிக்கட்டு போட்டிக்கான மைதானத்தை சமன்படுத்தும் பணிகளும், பார்வையாளர்கள் அமருவதற்கு கேலரிகள் மற்றும் ஜல்லிக்கட்டு காளைகளை அவிழ்த்துவிடும் மைதானம் சுற்றியும் பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேலும் ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் போட்டியில் கலந்து கொள்ள சேலம், நாமக்கல், மதுரை, திருச்சி, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 700 காளைகளும், 300 மாடு பிடிவீரர்களும் பங்கேற்பதற்காக பதிவு செய்து உள்ளனர். கடந்த 21ம் தேதி நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு போட்டியை தேதி குறிப்பிடாமல் விழாக்குழுவினர் ஒத்திவைத்தனர்.

இதை தொடர்ந்து இன்று 29ம் தேதி ஜல்லிக்கட்டு விழா நடத்த முடிவு செய்யப்பட்டு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

விழா தொடர்பாக செய்யப்பட்டு வரும் ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டர் கார்மேகம், எஸ்.பி அபிநவ் ஆகியோர் நேற்று நேரில் ஆய்வு செய்தனர். அப்போது விழா குழுவினர் ஜல்லிக்கட்டு போட்டிகள் குறித்தும், முன்னோற்பாடுகள் குறித்தும் விளக்கினர். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியில், 700க்கும் மேற்பட்ட காளைகளும் 300 மாடுபிடி வீரர்களும் கலந்து கொள்கின்றனர் என விழா குழுவினர் தெரிவித்தனர்.

Related Stories: