ஜனாதிபதி பதவி வேண்டாம் பிரதமர் அல்லது முதல்வர் ரெண்டுல ஒன்று வேணும்: மாயாவதி அதிரடி பேச்சு

லக்னோ: `எனக்கு ஜனாதிபதி பதவி வேண்டாம்; பிரதமர் அல்லது உபி முதல்வராகவே விரும்புகிறேன்,’ என்று பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி தெரிவித்தார். உத்தர பிரதேசத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜ வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. யோகி ஆதித்யநாத் 2வது முறை முதல்வராகி உள்ளார். இம்மாநிலத்தில் பலமுறை ஆட்சி செய்துள்ள மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி, இத்தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது. ஓரிரு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்நிலையில், பாஜ.வின் ‘பி டீம்’மாக இக்கட்சி செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டி வரும் சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், `பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியை பாஜ ஜனாதிபதியாக்கும்,’ என்று நேற்று முன்தினம் விமர்சித்தார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள மாயாவதி, ‘‘எதிர்காலத்தில் நாட்டின் பிரதமராகவோ அல்லது உபி. முதல்வராகவோ வேண்டும் என்று மட்டுமே எண்ணுவேன். ஜனாதிபதியாக வேண்டும் என ஒருபோதும் எண்ணியதில்லை. ஏழைகள், தாழ்த்தப்பட்டோர் தங்களுடைய சொந்த காலில் நிற்க, அம்பேத்கர், கன்ஷிராம் காட்டிய வழியில் வாழ்நாள் முழுவதும் போராடி வருகிறேன். இதை ஜனாதிபதியாவதன் மூலம் செய்ய முடியாது. ஆனால், உபி. முதல்வராக அல்லது நாட்டின் பிரதமரானால் மட்டுமே முடியும் என்பது அனைவருக்கும் தெரியும். என்னை ஜனாதிபதியாக்கி விட்டால், தான் முதல்வராவதற்கு எந்த இடையூறும் இருக்காது என்ற சுயநலத்துக்காக அகிலேஷ் என்னை ஜனாதிபதியாக்க பார்க்கிறார். அவரது எண்ணம் ஒருபோதும் நடக்கப் போவதில்லை,’’ என்றார்.

Related Stories: