போலியாக சாதி சான்று கொடுத்து அணுமின் நிலைய பணியில் சேர்ந்தவரிடம் ஜனாதிபதி விருதை திரும்ப பெற வேண்டும்: எஸ்சி., எஸ்டி சங்கங்கள் வலியுறுத்தல்

திருக்கழுக்குன்றம்: கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பட்டியல் இனம் என போலியாக பணியாற்றிய ஊழியரை கட்டாய பணி நீக்கம் செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைதொடர்ந்து, அவருக்கு வழங்கிய ஜனாதிபதி விருதை திரும்பபெற வேண்டும் என எஸ்சி, எஸ்டி சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். கல்பாக்கம் அணுமின் நிலைய வளாகத்தில் இயங்கும் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் உயர் சாதியை சேர்ந்த கணேசன், பட்டியல் சாதி என போலி சான்று அளித்து பணியில் சேர்ந்தார்.

அவர், போலி சான்று மூலம் பணியில் சேர்ந்ததை அறிந்த, நிர்வாகத்தினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதன்பேரில், கணேசனை கட்டாய பணி நீக்கம் செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில், நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கும் விதமாக கல்பாக்கம் அணுமின் நிலைய எஸ்சி, எஸ்டி சங்கம் சார்பில் சங்க தலைவர் சகாதேவன் தலைமையில், பொது செயலாளர் சதீஷ்குமார், நிர்வாகிகள் தென்னரசு, சந்திரசேகரன், ரவிச்சந்திரன் முன்னிலையில் நேற்று கல்பாக்கத்தில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து, பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி மகிழ்ச்சி தெரிவித்தனர்.

பின்னர் அவர்கள், செய்தியாளர்களிடம் கூறியதாவது. பட்டியல் சாதி என்று போலி சான்று பெற்று, பணியில் சேர்ந்த கணேசனை, சென்னை உயர் நீதிமன்றம் கட்டாய பணி நீக்கம் செய்து உத்தரவிட்டதை வரவேற்கிறோம். இந்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது. அதேபோல், போலி சான்று மூலம் பணியில் சேர்ந்த கணேசனுக்கு வழங்கிய குடியரசு தலைவர் விருதை திரும்பப் பெற வேண்டும். மேலும், அணுமின் நிலைய வளாகத்தில் இயங்கும் சென்னை அணுமின் நிலையம், மத்திய பொதுப்பணித் துறை, பாபா அணு ஆராய்ச்சி மையம் ஆகிய பிரிவுகளிலும் இதுப்போல் பட்டியல் இன சான்று போலியாக கொடுத்து சிலர் பணியாற்றுகின்றனர். இதையும் கண்டறிந்து பணி நீக்கம் உள்பட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’  என்றனர். அணுமின் நிலைய ஊழியர் கணேசன், நாளை (30ம் தேதி) பணி ஓய்வு பெறும் நிலையில், 2 நாட்களுக்கு முன் சென்னை உயர் நீதிமன்றம்  கட்டாய பணி நீக்கம் செய்து உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: