தேனியில் இருந்து நெல்லைக்கு வருகை 6 கிலோ பல்லாரி ரூ.100க்கு விற்பனை-பூண்டு விலையும் சரிந்தது

நெல்லை : நெல்லையில் பல்லாரி, பூண்டு விலை கடுமையாக சரிந்துள்ளது. தேனியில் இருந்து வரவழைக்கப்பட்ட 2 கிலோ பூண்டு ரூ.100க்கும், 6 கிலோ பல்லாரி ரூ.100க்கும் கூவி அழைத்து விற்பனை செய்கின்றனர்.கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தமிழகம் முழுவதும் சிறப்பாக பெய்ததால் அதன் பலன் தற்போதுவரை கிடைக்கிறது. பெரும்பாலான காய்கறிகள் தொடர்ச்சியாக 3 மாதங்களுக்கும் மேலாக விலை உயராமல் இருந்தது. குறிப்பாக தக்காளி விலை 3 மாதமாக கிலோ ரூ.20க்குள் இருந்த நிலையில் தற்போது தான் உயரத் தொடங்கியுள்ளது. தக்காளி தற்போது ஒரு கிலோ ரூ.60 வரை உயர்ந்துள்ளது. இதுபோல் அன்றாட உணவின் அத்தியாவசிய தேவையான சின்ன வெங்காயம், பல்லாரி வரத்தும் அதிகமாக உள்ளது.

இதனால் இவற்றின் விலையும் தொடர்ந்து கட்டுக்குள் உள்ளது. இந்த நிலையில் பல்லாரி வரத்து மேலும் அதிகரித்துள்ளது. குறிப்பாக தேனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பல்லாரி, பூண்டு ஆகியவற்றை வியாபாரிகள் மொத்தமாக கொள்முதல் செய்து நெல்லைக்கு கொண்டு வந்து சாலையோரங்களில் வேன்களில் குவித்துப்போட்டு விற்பனை செய்கின்றனர்.

பாளை சமாதானபுரம் பகுதியில் நேற்று 2  கிலோ பூண்டு ரூ.100க்கு விற்பனை செய்யப்பட்டது. இதுபோல் 6 கிலோ பல்லாரி  ரூ.100க்கு கூவி கூவி அழைத்து விற்றனர். விலை குறைவாக இருந்ததால் பொதுமக்கள்  இவற்றை ஆர்வமுடன் அதிகளவில் வாங்கிச் சென்றனர்.

அதே நேரத்தில் பாளை உழவர் சந்தையில் நேற்று ஒருகிலோ நாட்டுபூண்டு ரூ.50 முதல் ரூ.80 விலையில் விற்பனையானது. சீடு வகை பூண்டு ஒரு கிலோ ரூ.100 மற்றும் ரூ.110 விலையில் விற்கப்பட்டது. இதே உழவர் சந்தையில் பெரிய வெங்காயம் கிலோ ரூ.18 மற்றும் ரூ.20 விலைகளிலும், சின்ன வெங்காயம் ரூ.16, 23, 25 என்ற விலைகளிலும் விற்பனையானது.

Related Stories: