நாகர்கோவிலில் விபத்து கார் மோதி டிரான்ஸ்பார்மர் முறிந்தது-200 வீடுகளில் மின்சாரம் துண்டிப்பு

நாகர்கோவில் : நாகர்கோவிலில் டிரான்ஸ்பார்மரில் கார் மோதி 3 பேர் படுகாயம் அடைந்தனர். அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. நாகர்கோவில் ஒழுகினசேரி எம்.எஸ். ரோட்டில் நேற்று அதிகாலை 2.30 மணியளவில் வேகமாக வந்த கார், திடீரென கட்டுப்பாட்டை இழந்து அந்த பகுதியில் இருந்த டிரான்ஸ்பார்மரில் மோதியது. கார் மோதிய வேகத்தில் டிரான்ஸ்பார்மர் முறிந்தது. காரின் முன் பகுதியும் நொறுங்கியது. டிரான்ஸ்பார்மர் மீது கார் மோதியதும் பயங்கர தீப்பொறி ஏற்பட்டு, அந்த பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் வீடுகளில் இருந்தவர்கள், ஓட்டல்களில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அப்போது காருக்குள் இருந்து 3 பேர் அலறினர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு, பொதுமக்கள் சென்று 3 பேரையும் மீட்டனர். இவர்கள் ஒருவர் பெண் ஆவார். உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். தீயணைப்பு துறை, மின்சார துறையினரும் வந்தனர். படுகாயத்துடன் இருந்தவர்கள் மீட்கப்பட்டு, தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

 

கார் மோதிய வேகத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக ஒழுகினசேரி எம்.எஸ்.ரோடு, ராஜபாதை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட வீடுகளில் அதிகாலை 2.30 மணியில் இருந்து 4 மணி வரை மின்சாரம் இல்லை. உடனடியாக மின்வாரிய பணியாளர்கள் மின் இணைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். வழக்கமாக எம்.எஸ். ரோட்டில் அதிக போக்குவரத்து இருக்கும். அதிகாலை வேளை என்பதால், வாகன எண்ணிக்கை குறைவாக இருந்தது. இதனால் உயிர் சேதம் எதுவும் ஏற்பட வில்லை. பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இந்த விபத்தால் எம்.எஸ். ரோட்டில் சிறிது நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

Related Stories: