திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் சொத்து பிரச்னையால் குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற பெண்-போலீசார் தடுத்து நிறுத்தினர்

திருப்பத்தூர் : திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் சொத்து பிரச்னையால் குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் அமர் குஷ்வாஹா தலைமை தாங்கினார். வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர். குறிப்பாக முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, ஆதரவற்ற விதவை சான்று, குடிசை மாற்று திட்டத்தின்கீழ் வீடுகள் கட்டித்தரவும், அரசு வேலை வேண்டி ஆதரவற்ற விதவை உள்ளிட்டவர்கள் மனு அளித்தனர்.

இதில், மொத்தம் 295 மனுக்கள் பெறப்பட்டது. மனுக்களை பெற்ற கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து, கலெக்டர் பேசுகையில் ‘தலைமை செயலாளர் எந்த மாவட்டத்திலும் மனுக்கள் மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் குறைவாகத்தான் வர வேண்டும். விஏஓ மற்றும் வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று பொதுமக்களிடம் மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க வேண்டும். குறைவாக மனுக்கள் வரும் மாவட்டத்திற்கு பரிசு வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார். தற்போது திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிகளவில் மனுக்கள் வருவதில்லை.

பார்சல் பகுதியை சேர்ந்த முனியம்மாள்(75) அளித்த மனுவில், ‘திருப்பத்தூர் சஞ்சீவி பிள்ளை தெருவில் எனக்கு சொந்தமாக ₹1 கோடியில் வீடு உள்ளது. இந்த வீட்டை எனது மகள் செல்வி, அவரது கணவர் வெங்கடேசன் ஆகிய இருவரும் அபகரித்து கொண்டு என்னை வீட்டைவிட்டு வெளியே துரத்திவிட்டனர். வீட்டை என்னிடம் கொடுக்க கேட்டதற்கு இருவரும் சேர்ந்து என்னை ஆபாசமாக பேசியும், கொலை மிரட்டல் விடுத்தனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து  எனது வீட்டை மீட்டு தரவேண்டும்’ என்றார்.

காக்கங்கரை ஊராட்சியை சேர்ந்த சுரேஷ் அளித்த மனுவில், ‘நீர்பிடிப்பு  பகுதிகள் மற்றும் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க  வேண்டும்’ என்றார்.

திருப்பத்தூர் அடுத்த மவுகாரம்பட்டியை சேர்ந்தவர் லிங்கன். இவரது மகன்கள் திருப்பதி(32) மற்றும் வீரன்(35). இவர்கள் இருவருக்கும் லிங்கன் தனது 6 ஏக்கர் நிலத்தில் தலா 2 ஏக்கரை பாகப்பிரிவினை செய்து எழுதி கொடுத்துள்ளார்.

திருப்பதிக்கு பாகப்பிரிவினை செய்து கொடுத்தும், வீரன் மற்றும் அவரது மகன் ஹரிகிருஷ்ணன் ஆகியோர் திருப்பதிக்கு சொந்தமான நிலத்தை அளக்கவிடாமல் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகின்றனர். இதனால், விரக்தியடைந்த திருப்பதியின் மனைவி(29) என்பவர் தனது3 குழந்தைகளுடன் நேற்று திடீரென கலெக்டர் அலுவலக வளாகத்தில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். இதைப்பார்த்த போலீசார் அவர்கள் மீது தண்ணீர் ஊற்றி தடுத்து நிறுத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதிகாரிகள் மீது நடவடிக்கை

இதுகுறித்து கலெக்டர்  பேசுகையில், ‘கடந்த 3 மாதங்களாக 200 மனுக்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.  இந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி அடுத்த  வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பை அதிரிக்க வேண்டும்

கலெக்டர் அலுவலகத்தில் எஸ்பி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  30க்கும் மேற்பட்ட போலீசார் பொதுமக்களை சோதனை செய்து உள்ளே அனுப்பி வருகின்றனர். இருப்பினும், தற்கொலை முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. ஆகையால், பாதுகாப்பை அதிகாரிக சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மனைவிமீது மண்ணெண்ணெய் ஊற்றிய கணவர் கைது

திருப்பத்தூர் கலெக்டர் ஆபீசில் சொத்து பிரச்னை சம்பந்தமாக நேற்று மனு அளிக்க வந்த திருப்பதி என்பவர் தனது மனைவி மற்றும் மகன்கள் தினேஷ்பாபு, ரஞ்சித், மகள் சர்மிளா ஆகியோர் மீது மண்ணெண்ணெய் ஊற்றியுள்ளார். இதுதொடர்பாக, டவுன் போலீசார் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர்.

Related Stories: