தமிழகத்தில் உள்ள 25 லட்சம் வீரர்களை ஒருங்கிணைத்து உலகத்தரம் வாய்ந்த பயிற்சி அளிக்கப்படும்: அமைச்சர் மெய்யநாதன் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் உள்ள 25 லட்சம் வீரர்களை ஒருங்கிணைத்து உலகத் தரம் வாய்ந்த பயிற்சி அளிக்கப்படும் என்று அமைச்சர் மெய்யநாதன் அறிவித்துள்ளார். பேரவையில் நேற்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் பேசியதாவது: கூடைப்பந்து போட்டியில் தமிழகம் ஆடவர் பிரிவு தங்கப்பதக்கமும், பெண்கள் பிரிவு வெண்கலப் பதக்கமும் பெற்று சாதனை படைத்துள்ளனர். இந்த 2 அணிக்கு ₹42லட்சத்தை முதல்வர் பரிசு தொகையைாக வழங்கியுள்ளார்.

22 ஆண்டுகளுக்கு பிறகு போபாலில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹாக்கி போட்டியில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் இறுதி ஆட்டத்துக்கு சென்று வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளனர். குறிப்பாக உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி-2022 போட்டியை முதல்வர் இன்று தமிழகத்தில் நடத்துவதற்கான அனுமதியை பெற்றுள்ளார். அந்த போட்டியில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். 186 நாடுகளை சேர்ந்த 2200க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த போட்டியை மாணவ, மாணவிகள் கண்டு களிக்க உடனடியாக ₹1 கோடியை முதல்வர் ஒதுக்க உத்தரவிட்டுள்ளார்.

மெகா ஸ்போர்ட் சிட்டியை உருவாக்க ₹700 கோடி ஒதுக்கியுள்ளார். குத்துசண்டை வீரர்களுக்கு ₹10 கோடி ஒதுக்கீடு என பல்வேறு திட்டங்களை முதல்வர் தந்துள்ளார். இன்னும் 25லட்சம் விளையாட்டு வீரர்களை ஒருங்கிணைத்து உலகத்தரம் வாய்ந்த பயிற்சி அளிப்பதற்கான நடவடிக்கை எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: