அதிமுகவில் ரூ.10 லட்சம் பெற்று செயலாளர் நியமனம்: தேனி மாவட்ட நிர்வாகிகள் ஆடியோ வைரல்

கம்பம்: தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் நியமனத்தில் பணத்தை வாங்கிக் கொண்டு பதவிகளை கொடுப்பதாக, மாவட்டச் செயலாளர் சையதுகான் மீது, அக்கட்சியினரே புகார் அளிக்கும் ஆடியோ வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம், உத்தமபாளையத்தை சேர்ந்த சையதுகான், தேனி அதிமுக மாவட்டச் செயலாளராக உள்ளார். சமீபத்தில் நடைபெற்ற அதிமுகவின் உட்கட்சித் தேர்தலில் நிர்வாக வசதிக்காக கம்பம், தேனி நகரம், சின்னமனூர் ஒன்றியம் ஆகியவை இரண்டாகவும், போடி ஒன்றியம் மூன்றாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. கட்சிப் பதவிகளுக்கு நிர்வாகிகளை நியமிக்க விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.

நிர்வாகிகள் நியமனத்தில், அதிமுகவிற்குள் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அதிமுகவினர் சிலர் பேசிய ஆடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆடியோவில், ‘‘விண்ணப்பக் கட்டணம் கட்டி விருப்ப மனு வாங்காதவர்களுக்கு, பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. கட்சியின் உள்குத்து வேலைக்கு மாவட்டச் செயலாளரே காரணம். கட்சிக்காக பாடுபட்டவர்கள், சிறை சென்றவர்கள், சீனியாரிட்டிக்கு முன்னுரிமை இல்லை. நகரச் செயலாளர் பொறுப்பை ரூ.10 லட்சம் வாங்கிக் கொண்டு வழங்கியுள்ளார். உண்மையான தொண்டர்களுக்கு அளிக்கப்பட்ட அநீதி குறித்து விசாரித்து, இதற்கு காரணமான மாவட்டச் செயலாளர் சையதுகான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என பேசியுள்ளனர். மாவட்டச் செயலாளர் குறித்து அதிமுகவினர் பேசிய இந்த ஆடியோ சமூக வலைத்தளங்களில், வைரலாகி வருவதால் தேனி மாவட்ட அதிமுகவினர் மத்தியில் பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

Related Stories: