பெரம்பலூரில் துணிகரம் ஓட்டல் தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து 23 பவுன் நகை, வெள்ளி பொருட்கள் கொள்ளை-மர்ம நபர்களுக்கு வலை

பெரம்பலூர் : பெரம்பலூரில் ஓட்டல் தொழிலாளி வீட்டில் 23 பவுன் நகை, வெள்ளி பொருட்கள் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

பெரம்பலூர் நகராட்சி, எளம்பலூர் ரோடு, மதன கோபாலபுரம் விரிவாக்கம், ரோஸ் நகரை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் மகன் பிரகாஷ் (38). இவர் புது பஸ் ஸ்டாண்டில் உள்ள ஒரு ஓட்டலில் சர்வராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ரமாலட்சுமி (34). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

இந்நிலையில் ரமா லட்சுமியின் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லையென தகவல் வந்ததால் பிரகாஷ் தனது மனைவி ராமலட்சுமியுடன் கடந்த 20ம் தேதி வீட்டை பூட்டி விட்டு, கேரள மாநிலம் பாலக்காடு பகுதிக்கு சென்று விட்டனர். இந்நிலையில் நேற்று பிரகாஷ், ரமாலட்சுமி ஆகியோர் ரோஸ் நகரிலுள்ள வீட்டிற்கு வந்தனர். வீட்டின் கதவு தாழ்ப்பாள் உடைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டினுள்ளே இருந்த 4 பீரோக்களும் உடைக்கப்பட்டு கொள்ளை நடந்திருப்பது தெரிய வந்தது.

இது குறித்து பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் முருகேசன், எஸ்எஸ்ஐ அருள் மற்றும் போலீசார் சம்மந்தப்பட்ட பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர்.பீரோவில் வைத்திருந்த கேரள டைப், ஓம் எழுத்து வடிவம் பொறித்த 11 பவுன் தாலிக்கொடி, 3 பவுன் ஆரம், 2 பவுன் நெக்லஸ், 1 பவுன் கை செயின், மூன்றரை பவுன் தோடுகள், இரண்டேகால் பவுன் பட்டைசெயின், அரை பவுன் குமிழ் தோடு என மொத்தம் இருபத்தி மூனேகால் பவுன் தங்க நகைகள், ரூ.24ஆயிரம் மதிப்புள்ள 6 செட்டு வெள்ளிக் கொலுசுகள், ரொக்கப்பணம் ரூ.42 ஆயிரம் என மொத்தம் ரூ. 9.40 லட்சம் மதிப்பில் நகை, பணம் கொள்ளை போனது தெரியவந்துள்ளது.

கொள்ளை தொடர்பாக காவல்துறையின் மோப்ப நாய் வர வழைக்கப்பட்டு, கொள்ளையர் வந்துபோன வழித்தடம் கண்டறியப்பட்டன. கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளையரின் ரேகைகள் சேகரிக்கப்பட்டன. மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம மனிதர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: