பெரியகுளம் பகுதியில் மஞ்சள் செவ்வந்தி மகசூல் ஜோர்-கிலோ ரூ.40க்கு விற்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி

பெரியகுளம் : பெரியகுளம் பகுதியில் இந்தாண்டு மஞ்சள் செவ்வந்தி விளைச்சல் ஜோராக உள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் தளர்ந்து இந்தாண்டு கோயில் திருவிழாக்கள் நடப்பதால், கிலோ ரூ.30 முதல் 40 வரை கொள்முதல் செய்கின்றனர். இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.தேனி மாவட்டம், பெரியகுளம் அதனைச் சுற்றியுள்ள ஜெயங்கலம், சில்வார்பட்டி, குள்ளப்புரம், சங்கரமூர்த்திபட்டி, தேவதானப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிகமாக மஞ்சள் செவ்வந்தி மற்றும் கோழிக்கொண்டை பூக்களை அதிக அளவில் விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பொது முடக்கத்தால் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் கோயில் திருவிழாக்கள் மற்றும் திருமண நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. இதனால், செவ்வந்திப் பூக்களை விற்பனை செய்ய முடியாத நிலையில், விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், இந்த ஆண்டு நோய்த்தொற்று பரவல் முற்றிலும் குறைந்து வழக்கம் போல கோயில் திருவிழாக்கள் நடந்து வருகின்றன. திருமண நிகழ்வுகளும் வழக்கம்போல நடைபெற்று வருவதால் பூக்களுக்கு தேவை அதிகரித்துள்ளது. இதனால், விவசாயிகள் ஆர்வமுடன் பூக்கள் சாகுபடி செய்து வருகின்றனர். பெரியகுளம் பகுதியில் மஞ்சள் செவ்வந்தி பூக்களை அதிகளவில் பயிரிட்ட விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கிறது. கிலோ 30 முதல் 40 வரை கொள்முதல் செய்வதால் பூ சாகுபடி செய்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: