குடியிருப்புப் பகுதிகளில் அடிக்கடி ஆஜர் மூணாறை மிரட்டும் காட்டுயானைகள்

மூணாறு : மூணாறில் உலா வரும் காட்டுயானைகளால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறு நகரம், தென்னிந்தியாவின் முக்கிய சுற்றுலாத்தலங்களுள் ஒன்றாக திகழ்கிறது. சுற்றிலும் வனப்பகுதிகளால் சூழப்பட்ட இந்த நகரில் முக்கிய தொழில் தேயிலை விவசாயம்.

இதனால், மூணாறு பகுதியில் எங்கு பார்த்தாலும் பச்சைப்பசேல் என பச்சைக் கம்பளம் போர்த்தியது போல இருக்கும். தேயிலை விவசாயத்தை நம்பி ஏராளமான தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களுக்கான குடியிருப்புகள், தேயிலை தோட்டங்களிலும், அதனை ஒட்டிய வனப்பகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ளன.நகரைச் சுற்றி வனப்பகுதிகள் இருப்பதால், காட்டுயானைகள் அடிக்கடி மூணாறு நகர் மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்குள் உலா வருகின்றன. தொழிலாளர்களின் குடியிருப்புகள், விவசாய நிலங்களை சேதப்படுத்துகின்றன.

மேலும், இரவு, பகல் பாராமல் தெருக்கள், சாலைகளில் காட்டுயானைகள் திரிகின்றன. அடிக்கடி தொழிலாளர்களையும் தாக்குகின்றன. குறிப்பாக படையப்பா, சில்லிக்கொம்பன், அரிக்கொம்பன், கணேசன், ஊசிக்கொம்பன், முறிவாலன் என 6 காட்டுயானைகள் சாந்தாம்பாறை, சின்னக்கானல், மூணாறு, தேவிகுளம் ஆகிய பஞ்சாயத்துகளில் சுற்றித் திரிந்து பொதுமக்களுக்கு பீதியை ஏற்படுத்துகின்றன.

படையப்பாவால் பயங்கர பீதி:

மூணாறு நகரில் படையப்பா என்கிற காட்டுயானை இரவு, பகல் பாராமல் மிரட்டுகிறது. சில தினங்களுக்கு முன் பஸ்சை தாக்கியது. மறுநாள் காய்கறி கடையை அடித்து நொறுக்கி, அங்கிருந்த பழங்களை சாப்பிட்டது. இதனால், பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. தேயிலை தோட்டங்களுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் உயிரை கையில் பிடித்து செல்கின்றனர். மாலையில் வீட்டுக்கு வந்தால், வீடுகளிலேயே முடங்குகின்றனர். யானைகளின் தாக்குதலில் பலர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

சின்னக்கானல் பகுதியில் அட்டூழியம் செய்து வரும் அரிக்கொம்பன் காட்டுயானை, ரேஷன் கடையில் உள்ள அரிசியை காலி செய்கிறது. யானைகளின் அச்சுறுத்தலால் சுற்றுலாத்துறையும் பாதிக்கப்படுகிறது.காட்டுயானைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தக்கோரி பொதுமக்கள் பலமுறை போராட்டம் நடத்தியும் பயனில்லை. கடந்த 20 ஆண்டுகளில் யானை தாக்குதலில் மூணாறு, சின்னக்கானல் பகுதியில் 40க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். பொதுமக்களை அச்சுறுத்தும் 6 காட்டுயானைகளையும் பிடித்து கோடநாடு யானைகள் சரணாலயத்திற்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: