போதை பொருள் தடுப்பு நடவடிக்கையால் தமிழகத்தில் குற்றங்கள் குறைந்துள்ளது: நெல்லையில் டிஜிபி சைலேந்திரபாபு பேட்டி

நெல்லை: தமிழகத்தில் கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்கள் தடுப்பு நடவடிக்கையால் குற்றங்கள் குறைந்துள்ளது என டிஜிபி சைலேந்திரபாபு  தெரிவித்தார். நெல்லை சுத்தமல்லி காவல் நிலைய எஸ்ஐ மார்க்ரெட் தெரசாவை, அபராதம் விதித்ததற்காக ஆறுமுகம் என்பவர் கத்தியால்  குத்தினார்.  படுகாயமடைந்த அவர் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று அவரை சந்தித்து ஆறுதல் கூறிய தமிழக டிஜிபி சைலேந்திரபாபு பின்னர் அளித்த பேட்டி: தமிழகத்தில் கஞ்சா, புகையிலை பொருட்கள் உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்றவர்கள் கைது  செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து  தமிழகத்தில் குற்றச்செயல்கள் குறைந்துள்ளது.

போலீஸ் ஸ்டேஷன்களில் புகார்  கொடுக்க வரும் பொதுமக்களிடம் நல்லுறவைப் பேணவும், கனிவுடன் பேசி புகார்களை பெறவும் போலீஸ் வரவேற்பாளர்கள் காவல் நிலையங்களில் விரைவில்  நியமிக்கப்படுவர். பொதுமக்களிடம் போலீசார் கனிவுடன் பேச பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது.

போலீசாருக்கு வார விடுமுறை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.  அதுகுறித்தும் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டில் உள்ளது. குற்றச்செயல்கள்  குறைந்துள்ளன. பொதுமக்கள், போலீசார் இணக்கமாக செயல்பட ‘‘காவல் உதவி செயலி’’ துவங்கப்பட்டுள்ளது.

இதில் 66 ஆப்கள் உள்ளன. இதனை பயன்படுத்தி பொதுமக்கள் தங்களுக்கு தேவையான தகவல்கள், புகார்களை தெரிவிக்கலாம். இதன் மூலம் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். கஞ்சா, குட்கா வழக்குகள் அதிகம் பதிவு செய்யப்படுவதால் குற்றங்கள் தடுக்கப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: