ஆண்டுக்கு 6 கிராம சபை கூட்டங்கள் தமிழக அரசின் அறிவிப்புக்கு கமல்ஹாசன் வரவேற்பு

சென்னை: தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளுடன் அதன் தலைவர் கமல்ஹாசன் காணொலி மூலம் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது: கிராம சபைகள் பற்றி மக்கள் மத்தியில் கொண்டு சென்றதில் மக்கள் நீதி மய்யத்தின் பணி மகத்தானது. இது மக்களுக்கு கிடைத்த வெற்றி. கிராம சபை கூட்டங்களை ஆண்டுக்கு 6 ஆக உயர்த்திய தமிழக அரசின் முடிவு வரவேற்கத்தக்கது. பாராட்டுகள். கூட்டத்தின் எண்ணிக்கையை அதிகரித்தால் மட்டும் போதாது. அதில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை செயல்படுத்த வேண்டும். அவ்வாறு செயல்படுத்துவதை மக்கள் கண்கூடாகப் பார்க்க வேண்டும். அரசும் இதை கண்காணிக்க வேண்டும். அப்போதுதான் கிராம சபை கூட்டங்களுக்கு முழு வெற்றி கிடைத்ததாக அர்த்தம்.

மக்கள் நலன் என்ற பாதையில் இருந்து அரசியல் கட்சிகள் நழுவிவிடக் கூடாது. நான் அரசியலுக்கு வந்ததும், நாம் அரசியலுக்கு வந்ததும் அதற்காகத்தான். அதில் கொஞ்சம் கூட நழுவாமல் மக்கள் நீதி மய்யம் செயல்படுகிறது. சுயநலத்துக்காகவும், ஆதாயங்களுக்காகவும் எடுக்கப்படும் முடிவுகளை விமர்சிப்போம். மாற்றங்களைக் கொண்டு வந்தால் வரவேற்போம். பாராட்டுவோம். அரசியலில் உறவும் தேவை இல்லை. பகையும் தேவை இல்லை. அரசாங்கம் நிறைவேற்றிய தீர்மானத்தை ஆளுநர் நிறைவேற்றவில்லை. விளையாடிக் கொண்டிருக்கிறார்.

அதற்கு என்ன காரணம்? ஜனநாயகம் இருப்பது போல் பிரம்மை தெரிகிறது. ஆனால், ஜனம் தனியாகவும், நாயகம் தனியாகவும்தான் இருக்கிறது. கிராம சபை கூட்டங்களை அதிகமாக நடத்த வேண்டும். அதேவேளையில், கண் துடைப்புக்காக நடத்திவிடக் கூடாது. எந்த மாற்றமும் வரவில்லை என்று சோர்ந்துவிடக் கூடாது. நம்பி செயல்படுவோம். நம்பிக்கையுடன் செயல்படுவோம். இவ்வாறு கமல்ஹாசன் பேசினார். இதை தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளும், உறுப்பினர்களும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

Related Stories: