வன தலைமை அலுவலக கட்டிடம் கட்டியதில் முறைகேடு?... வேளச்சேரி வனத்துறை கட்டிடத்தில் விதிமீறல் குற்றச்சாட்டு

சென்னை: சென்னை வேளச்சேரியில் உள்ள காப்புக்காட்டில் வன துறையின் எவ்வித விதிகளையும் பின்பற்றாமல் அந்த துறைக்கான தலைமை அலுவலக கட்டிடம் கட்டப்பட்டுள்ளதாக புகார்  எழுந்திருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. கிண்டி தேசிய பூங்காவை ஒட்டியுள்ள வேளச்சேரி காப்புக்காட்டில் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் 2019-21 கால கட்டத்தில் இந்த பிரம்மாண்டமான கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. சுமார் 30 கோடி ரூபாய் அளவில் கட்டப்பட்ட இந்த 5 அடுக்கு கட்டிடம் 21471 சதுர ஆடி பரப்பளவு கொண்டது. தமிழ்நாடு வனத்துறைக்கான இந்த தலைமை கட்டிடம் குறைந்தபட்சம் வனத்துறையின் விதிகளை கூட பின்பற்றாமல் கட்டப்பட்டது தெரிய வந்துள்ளது. மாவட்ட வன அலுவலரின் அனுமதி கூட பெறவில்லை என்றும் town and country planning சட்டத்தின் கீழும் அனுமதி பெறவில்லை என வன மற்றும் சுற்றுசூழல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

வனத்துறை தலைமை அலுவலக கட்டிடத்தில் சுத்திகரிக்கப்படாமல் கிண்டி தேசிய பூங்கா இல்லத்தில் கழிவு நீர் பூங்கா வெளியேற்றப்படுவதாகவும் புகார் உள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு விசாரணை நடத்த வேண்டும் என்று சுற்றுசூழல் ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். இந்த கட்டிடம் கட்டிய வனத்துறையினரின் விளக்கம் போதுமானதாக இல்லை எனில் அதை இடிப்பதே நியாயமான நடவடிக்கை என்றும் சூழலியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். இதனிடையே இதற்கு ரூ.7 கோடி அளவுக்கு தேவையற்ற செலவுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அது குறித்தும் விசாரிக்கப்பட வேண்டும் என்பதும் கோரிக்கையாகும்.

Related Stories: