திருப்பத்தூர் கலெக்டர் பங்களாவில் புகுந்தது தீயணைப்பு வீரர்களுடன் பாம்பு பிடித்த கலெக்டர்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் கலெக்டர் பங்களாவில் பாம்பு புகுந்ததால் தீயணைப்பு வீரர்களுடன் சேர்ந்து கலெக்டர் பாம்பு பிடித்த சம்பவம் பரபரப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. திருப்பத்தூர் அடுத்த கதிரிமங்கலம் ஊராட்சி சி.கே. ஆசிரமம் அருகே மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாகா குடியிருப்பு உள்ளது. இந்நிலையில் நேற்று மாலை கலெக்டர் பங்களா வீட்டிற்கு செல்லும்போது திடீரென 10 அடி நீளமுள்ள விஷத்தன்மை கொண்ட பாம்பு ஒன்று அவரது வீட்டிற்குள் செல்ல முயன்றது. இதைப்பார்த்த கலெக்டர் திருப்பத்தூர் தீயணைப்புதுறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தார்.

தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து கலெக்டர் பங்களாவில் பல்வேறு இடங்களில் ஒரு மணி நேரம் பாம்பை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள புதரில் மறைந்திருந்த 10அடி நீளம் உள்ள கொடிய விஷம் கொண்ட பாம்பை கலெக்டரும், தீயணைப்பு வீரர்களும் சேர்ந்து பிடித்தனர். பின்னர் அந்த பாம்பை அருகே உள்ள ஏலகிரிமலை காப்புக் காட்டில் பத்திரமாக விட்டனர்.

Related Stories: