நமது முதலமைச்சர் திராவிட மாடல் ஆட்சி நடத்தி வருகிறார்; திராவிட மாடல் என்றாலே, முன்னுரிமை பெறுபவர்கள் பெண்களே ஆவர்: அமைச்சர் கீதாஜீவன் பேரவையில் பேச்சு

தெற்கிலிருந்து உதித்த ஞானச் சூரியன்!

திருக்குவளை ஈன்றெடுத்த கருணையின் நிதியம்!

கொள்கை நிலத்தில் கிளர்ந்தெழுந்த தங்கம்!

கல்வி பொருளாதாரம், தொழிற்துறையில் இன்று தமிழகம் தலை நிமிர்ந்து நிற்பதற்கு அன்றே வித்திட்ட வித்தகர்!

கலைஞர் என்பது பெயரே அல்ல!

அது ஒரு நூற்றாண்டின் வரலாறு!

கலைஞர் என்பது ஒரு சொல் அல்ல!

அது தமிழினத்தின் தனிப்பெரும் அடையாளம்!

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் குடி கொண்டிருக்கும் திசை நோக்கி எனது முதல் வணக்கம்.

    

கலைஞர் எனும் ஞான ஊற்றிலிருந்து பெருநதியாய் புறப்பட்டு, புகழ் நதியாய் நடைபோட்டு, இன்று தமிழகத்தை வளமிகு மாநிலமாக்கும் இலட்சிய நோக்குடன், வளர்ச்சிக்கு நேராய் வழிநடத்திக் கொண்டிருக்கும், அயரா உழைப்பின் திருவடிவம், இந்நாட்டவரும்; எந்நாட்டவரும் வியந்து நோக்கும் நம் தென்னாட்டுச் சிகரம், அறிவார்ந்த ஆற்றலின் அமைதிப் பூங்கா, “உங்களில் நான் ஒருவன்” என உரைத்திட்ட உயிர் தலைவா! “ஏழைகளின் சிரிப்பினிலே இறைவனைக் காண்போம்” எனும் பேரறிஞர் அண்ணாவின் மொழிக்கு உயிர் தந்தீர்! ஏழையர்க்கு விளக்கானீர்! பாழாகிப் போய்க்கிடந்த பல்வேறு திட்டங்களைப் பாங்காகச் சீரமைத்துப் பாமரர்க்கும் சேர்த்திட்டீர்!

“சென்றிட்டீர் அமீரகந்தான்!

சேர்த்திட்டீர் பெருநட்பை!

செழித்திடவே தமிழகந்தான்!

செய்திட்டீர் ஒப்பந்தம்!

தன்னலமே கருதாமல் தமிழ்நாடு உயர்ந்திடவும்,

தமிழ்ச் சான்றோர் மகிழ்ந்திடவும், தமிழ்மொழி தழைத்திடவும்!

தமிழ் மக்களெல்லாம் எட்டுத்திக்கும் ஏற்றமுறவும் -

தம் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட தன்மானத் தளபதி - நமது  முதலமைச்சருக்கு எனது வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்களோடு மக்களாக இருந்து மக்கள் பணியாற்றிவரும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர், நல்ல பல கருத்துக்களை இத்துறையின் வளர்ச்சிக்காக எடுத்துரைத்த உதயநிதி அவர்களுக்கும் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.  கழகத்தின் மகளிரணிச் செயலாளரும், எங்களது தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியின் உறுப்பினரும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முன்மாதிரியாக பணியாற்றி வரும் கனிமொழி அக்கா அவர்களுக்கும் எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மதிப்பிற்குரிய அவை முன்னவர், கழகத்தின் பொதுச் செயலாளர்  மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் அவர்களுக்கும், புகழ்மிக்க தமிழ்நாடு சட்டப் பேரவையின் நடுநாயகரான மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களுக்கும் எனது வணக்கத்தை உரித்தாக்குகிறேன். தூத்துக்குடி மாவட்ட முன்னாள் தி.மு.க. செயலாளர், தலைவர் கலைஞர் அவர்களின் முரட்டுப் பக்தன் எனப் பெயர் பெற்ற மறைந்த எனது தந்தை என். பெரியசாமி அவர்களை இத்தருணத்தில் நினைவுகூர்கிறேன்.

என் உணர்வோடு கலந்துவிட்ட தூத்துக்குடி தொகுதி மக்களுக்கும், என்னோடு கழகப் பணியாற்றிவரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.கழக செயல்வீரர்களுக்கும், கூட்டணி கட்சித் தோழர்களுக்கும் என் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.  அமைச்சர் பெருமக்களுக்கும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் எனது அன்பு வணக்கம். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மானியக் கோரிக்கை மீதான பதிலுரையை இந்த அவைக்கு நான் சமர்ப்பிக்கிறேன். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் அவர்கள் தான் பதவியேற்ற நாள் முதல் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் சமூகத்தில் உள்ள நலிவடைந்த, ஒடுக்கப்பட்ட மற்றும் விளிம்பு நிலையில் உள்ள பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலன், ஊட்டச்சத்து தேவைப்படும் குழந்தைகள், ஆரோக்கியமான சூழல் தேவைப்படும் மூத்த குடிமக்கள், சமூக பாதுகாப்பு மற்றும் உரிமைகள் தேவைப்படும் திருநங்கையர் என்று அனைவருக்குமான முன்னோடித் திட்டங்களை தீட்டி நடைமுறைப்படுத்தி, அவர்களின் வளர்ச்சி மற்றும் வாழ்வாதாரத்திற்கான பல்வேறு கொள்கைகளையும் சிறப்புற வகுத்து வருகின்றார். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணா ஆகியோரின் சிந்தனைகளையும், கருத்துக்களையும், பெண்களின் கல்விக்காக, உரிமைக்காக, முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களாகவும், சட்டங்களாகவும் நடைமுறைபடுத்தினார்கள்.  அவற்றுள் பெண்களுக்கு சொத்துரிமை, வேலைவாய்ப்பு, கல்வி வாய்ப்பு, மகளிர் சுய உதவிக்குழுக்கள், காவல்துறையில் பெண் காவலர் நியமனம், பேறுகால நிதி உதவி, திருமண நிதியுதவி, பெண்கள் பெயரில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்குதல் மற்றும் பெண்கள் தொழில் தொடங்கிட கடன் உதவி போன்றவை குறிப்பிடத்தக்கவையாகும்.  

நமது முதலமைச்சர் திராவிட மாடல் ஆட்சி நடத்தி வருகிறார்;  திராவிட மாடல் என்றாலே, முன்னுரிமை பெறுபவர்கள் பெண்களே ஆவர். நாட்டின் பொருளாதார வளர்ச்சி, பெண்களுக்கு அதிகாரமளிப்பதினால் ஏற்படுகிறது, என்பதை உணர்ந்து பெண்களுக்கு சம உரிமை, சமவாய்ப்பு, சமத்துவம் வழங்கிட சமூக மாற்றத்தை ஏற்படுத்திட வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழகத்தில் முதன்முறையாக பெண்களுக்கான மாநில மகளிர் கொள்கையை உருவாக்கிட மாண்புமிகு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக மாநில அளவில் பல்வேறு பணிபுரியும் பெண்கள், மக்கள் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், உலக வங்கி, யூனிசெப், ஐக்கிய நாட்டு சபையின் பெண்கள் அமைப்பு ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்ற பல்வேறு கருத்துப் பட்டறைகள் நடத்தப்பட்டு, கருத்துக்கள் தொகுக்கப்பட்டு தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை வெளியிட தயார் நிலையில் உள்ளது.  2030ம் ஆண்டிற்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் One Trillion Dollar Economy (ஒரு இலட்சம் கோடி அமெரிக்க டாலர்கள்) (GDP Economy) உள்ள தமிழ்நாட்டினை உருவாக்குவதே மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் குறிக்கோள் ஆகும்.  அந்த குறிக்கோளை அடைந்திட பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பு முக்கியமானதாகும்.  அந்நிலையை எட்டுவதற்கு காலம் காலமாக நிலவி வரும் பெண்களுக்கு எதிரான நெருக்கடி சூழ்நிலையையும், தடைகளையும் உடைத்தெறிந்து வெளிவர, கல்வி அவசியமானது என்பதையறிந்து மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டமானது, “மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம்” என மாற்றியமைக்கப்பட்டுள்ளது.  பெண்களின் உயர்கல்வியினை உறுதி செய்யும் இத்திட்டமானது பெண்களின் உரிமையை நிலைநாட்டிடும் சிறந்த முன்னெடுப்பு நடவடிக்கையாகும்.  பெண்களின் நலனுக்காக இத்திட்டத்தை தந்துள்ள மாண்புமிகு முதலமைச்சருக்கு அனைத்து மாணவிகளும், பெற்றோர்களும் நன்றி தெரிவிக்கிறார்கள் என்பதை இந்த அவையிலே தெரிவித்துக் கொள்கிறேன்.

முதலமைச்சர் அவர்கள் கடந்த 2021 நவம்பர் 27ம் தேதி தமிழக மக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் ஒரு வேண்டுகோள் விடுத்தார்.  அதாவது, “அறத்தையும், பண்பாட்டையும் அதிகம் பேசும் தமிழகத்தில், கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் முன்னேறிய ஒரு மாநிலத்தில், அறிவியலும், தொழில்நுட்பமும் வளர்ந்த காலக்கட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான பாலியல் வன்கொடுமைகள் வெட்கி தலைகுனிய வைக்கிறது.  பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகும் பெண்கள் மற்றும் குழந்தைகள் 1098 மற்றும் 14417 ஆகிய உதவி எண்களில் புகார் தர முன்வர வேண்டும்.  ஒரு தந்தையாக, உங்கள் சகோதரனாக, உங்கள் குடும்பத்தில் ஒருவனாக நான் இருக்கிறேன்.  இந்த அரசு இருக்கிறது.  பாலியல் குற்றங்கள் குறித்து புகார் வந்த உடனேயே இந்த அரசு நடவடிக்கை எடுக்கும்” என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தெரிவித்தார். “பெண்களின் துயர் துடைத்திட நான் இருக்கிறேன்” என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அளித்த நம்பிக்கையின் காரணமாக, உதவி எண்களுக்கு வரும் அழைப்புகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளன. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான உதவி எண்களுக்கு பெண்கள் தைரியமாக, புகார் செய்ய முன்வந்துள்ளனர்.  கடந்த காலங்களில் நடந்த குற்றச்செயல்களுக்கு கூட தற்போது தாமாக முன்வந்து புகார் தெரிவிக்கின்றனர்.   உதாரணத்திற்கு, 2018 ம் ஆண்டு முதல் 2021 மார்ச் வரை மகளிர் உதவி எண். 181-க்கு வந்த மொத்த அழைப்புகள் 17,423 ஆகும்.  ஆனால், கடந்த ஓராண்டில் மட்டும் 15,046 அழைப்புகள் வரப்பெற்றுள்ளன.  

மேலும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையங்களில் 2018ம் ஆண்டு முதல் 2021 மார்ச் வரை பயன்பெற்றவர்கள் மொத்தம் 13,121 பேர். ஆனால் கழக அரசு பொறுப்பேற்ற இந்த ஓராண்டு காலத்தில் 13,152 பேர் பயனடைந்துள்னர்.  குற்றச் செயல்கள் குறித்து அளிக்கப்படும் புகார்கள் மீதும், அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதை அனைவரும் அறிவோம்.  குற்றச் செயல்கள் நடைபெறாமல் தடுத்திடவும் இத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதையும் இந்த அவைக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சட்டம்-ஒழுங்கு தொடர்பாக நடத்தும் ஒவ்வொரு ஆய்வுக் கூட்டத்திலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை கூராய்வு செய்கிறார். அது மட்டுமல்லாமல் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்திட இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.  2021 முதல் மார்ச் 2022 வரை தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு குறித்து, சுமார் 45 ஆயிரம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக தொலைதூர இடங்களுக்கு சென்று விசாரணை செய்வதற்காக நடமாடும் காவல் வாகனம் மூலம் விசாரணை பதிவு செய்யப்பட்டு துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த மே-2021 முதல் மார்ச் 2022 வரையிலான 10 மாதங்களில் “பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் (போக்சோ) 2012-ன் கீழ் 4023 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 36 வழக்குகளில் நீதிமன்றத்தால் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும், நிலுவையில் இருந்த 1082 வழக்குகளில் விரைவாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணையில் உள்ளது. முந்தைய அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் போக்சோ சட்டம்-2012ன் கீழ் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவுவதற்காக “தமிழ்நாடு பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான இழப்பீட்டு நிதியம்” ஒன்றை ஏற்படுத்தி, அந்த நிதியத்திற்கு இரண்டு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.  ஆனால், கடந்த ஆட்சிக் காலத்தில் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தைக்கு கூட இந்த நிதியத்தின் மூலம் நிதியுதவி வழங்கப்படவில்லை என்பதே உண்மை.  

ஆனால், நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்றபின், போக்சோ சட்டம் 2012-ன் கீழ் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்குவது குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு கூடுதலாக 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, 2012-லிருந்து நிலுவையிலிருந்த வழக்குகளில், 373 குழந்தைகளுக்கு ஏறக்குறைய 7 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

இந்த துறையின் சீரிய செயல்பாட்டினால் சத்துணவுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை சென்ற ஆண்டில் இருந்த 42,13,617-லிருந்து, 46,70,458-ஆக உயர்ந்துள்ளது என்பதை இந்த அவைக்கு பெருமையுடன் கூறிக் கொள்கிறேன்.  தமிழ்நாட்டில் ஒரு குழந்தை கூட இரவு உறங்கச் செல்லும்போது பசியோடு உறங்கக்கூடாது என்ற முதலமைச்சரின் எண்ணத்திற்கு ஏற்ப இத்துறை செயல்பட்டு வருகிறது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டினை ஊட்டச்சத்து குறைபாடில்லா மாநிலமாக உருவாக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்கள்.  ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மூலம் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், பிறந்தது முதல் 6 வயதுடைய குழந்தைகள், வளரிளம் பெண்கள் ஆகியோருக்கு வளர்ச்சி கண்காணிப்பு மற்றும் ஊட்டச்சத்து சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஒரு குழந்தையின் “முதல் ஆயிரம் நாட்கள்”, அதாவது குழந்தை கருவில் உருவானது முதல் இரண்டு வயது வரையிலான காலத்தில் 85 சதவிகிதம் மூளை வளர்ச்சி பெறுகிறது என்பதோடு, குழந்தையின் உடல்நலன், அறிவாற்றல், உணர்வுத்திறன் சிறப்பாக அமையும் என்பதால், இந்த காலம் “Golden Days” (தங்க நாட்கள்) எனப்படுகிறது.  இந்த 1000 நாட்களில் கர்ப்பிணி பெண்களுக்கான ஊட்டச்சத்தின் முக்கியத்துவம், தாய்ப்பால் கொடுத்தல் மற்றும் குழந்தைகளுக்கு சத்தான உணவு கொடுத்தலின் அவசியம் என்பதை வலியுறுத்தி இத்துறையால் மக்களிடையே பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகளின் பெயரில் முதலீடு செய்யப்பட்ட தொகை நீண்ட காலமாக முதிர்வடைந்து வழங்கப்படாமல் இருந்த நிலையில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உத்தரவுப்படி இத்துறை சிறப்பு நடவடிக்கை எடுத்து 30,114 பெண் குழந்தைகளுக்கு 90 கோடியே 18 இலட்சம் ரூபாய் முதிர்வுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. கொரோனா நோய்த்தொற்று பாதிப்பினால் தமிழகத்தில் பல உயிரிழப்புகள் நேர்ந்துள்ளன.  இதில் பெற்றோரை இழந்த குழந்தைகள் ஆதரவற்றவர்களாகவும், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பாதுகாப்பற்ற நிலைக்கும் தள்ளப்பட்டனர்.  இந்த இக்கட்டான காலச்சூழ்நிலையை கருத்தில் கொண்டு முதலமைச்சர் அவர்கள் கொரோனா நோய்த் தொற்றினால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு உடனடி நிவாரணத் தொகை வழங்கிட உத்தரவிட்டார்கள்.  இத்திட்டம் இந்தியாவிலேயே முன்மாதிரி திட்டமாக உருவெடுத்துள்ளது.  அனைவராலும் பாராட்டப்படுகிறது.  இதில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு இரண்டு பெற்றோர்களையும் இழந்த 338 குழந்தைகளுக்கு, குழந்தைகளின் பெயரில் தலா 5.00 இலட்சம் ரூபாய் வைப்பீடு செய்யப்பட்டுள்ளது.  அதேபோல கொரோனா நோய்த் தொற்றினால் பெற்றோரை ஒருவரை இழந்த 10,325 குழந்தைகளுக்கு உடனடி நிவாரண தொகையாக ஒரு குழந்தைக்கு 3 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.  ஆகமொத்தம், கொரோனாவினால் பெற்றோரை இழந்த 10,663 குழந்தைகளுக்கு 326 கோடியே 65 இலட்சம் ரூபாய் இதுவரை வழங்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் தமிழர்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டு 6 குழந்தைகளுக்கு 18 இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும், பெற்றோர் இருவரையும் இழந்து, பாதுகாவலரின் பராமரிப்பில் உள்ள குழந்தைகளுக்கு மாத பராமரிப்பு தொகையாக தலா 3 ஆயிரம் ரூபாய் என இதுவரை மொத்தம் 84 இலட்சத்து 93 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இளைஞர் நீதிக் குழுமங்கள் மூலம் சட்டத்திற்கு முரணாக செயல்பட்டதாகக் கருதப்பட்டு அரசு கூர்நோக்கு இல்லங்கள் மற்றும் சிறப்பு இல்லங்களில் உள்ள சிறார்களுக்கு ஆண்டு முழுவதும் வல்லுநர்கள் மூலம் ஆற்றுப்படுத்துதல் சேவை வழங்கப்பட்டு வருகிறது.  திறன் மேம்பாட்டுக் கழகம் மூலமாகவும், தொண்டு நிறுவனங்கள் மூலமாகவும் அவர்களின் மறுவாழ்விற்காக தொழிற்பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.

குழந்தைகள் இல்லம், முதியோர் இல்லங்கள் அனைத்தும் இத்துறையின் கீழ் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.   போதைப் பழக்கத்திற்கு ஆட்படும் சிறார்களுக்கு அவர்களுக்கென்று பிரத்யேகமாக ஏற்படுத்தப்பட்டுள்ள போதைத் தடுப்பு மையங்களில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு அரசு குழந்தைகளின் வாழ்க்கை, சுகாதாரம், ஊட்டச்சத்து, கல்வி, பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்து நிலையான வளர்ச்சி மற்றும் நலன்களை உருவாக்கிட, குழந்தைகளுக்கான தமிழ்நாடு மாநில கொள்கை 2021 மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்டது. குழந்தைகளின் நலனுக்காக யூனிசெப் (UNICEF) நிறுவனத்துடன் இணைந்து இத்துறை இதற்கு ஒரு செயல்திட்டத்தை உருவாக்கி வருகிறது. முதலைமைச்சர் அவர்கள் இந்த அரசு பொறுப்பேற்றவுடன், மகளிர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கைகள், நகரப் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் செய்யலாம் என்று உத்தரவிட்டார்.  அதன் காரணமாக பெண்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கைகளின் அன்றாட செலவு குறைக்கப்பட்டுள்ளதோடு மட்டுமல்லாமல், பெண்கள் சுயசார்புடன் செயல்பட வழிவகுத்துள்ளது என்பதை இங்கு கூறிக் கொள்ள விரும்புகிறேன்.  இச்சேவை மூலம் கடந்த 12.07.2021 முதல் 10.03.2022 வரை சுமார் 91 கோடியே 85 இலட்சம் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  

பெண்களின் உரிமைக்காகவும், பொருளாதார ஏற்றத்திற்காகவும் 1989-ம் ஆண்டு பெண்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவிகித இட ஒதுக்கீட்டினை முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் வழங்கினார்கள்.  தற்போது மாண்புமிகு முதலமைச்சர் தளபதியார் அவர்கள் பெண்களுக்கு வேலைவாய்ப்பில் 40 சதவிகித இட ஒதுக்கீட்டை அளித்துள்ளார்.  இதன் மூலம் பெண்களுக்கான சம வாய்ப்பு மற்றும் சமூக நீதி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றால் மிகையாகாது.  முதலமைச்சர் அவர்கள் மார்ச் 8 - சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் வழங்கப்படும் வீடுகள் இனி பெண்களின் பெயரிலேயே வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்கள். தற்போது தமிழ்நாட்டில் 28 அரசு பணிபுரியும் மகளிர் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. மேலும், திருச்சி, கூடுவாஞ்சேரி மற்றும் தாம்பரம் ஆகிய மூன்று இடங்களில், 3 அரசு பணிபுரியும் மகளிர் விடுதிகள் கட்டப்பட்டு வருகின்றன.  மற்ற மாவட்டங்களிலும் பணிபுரியும் மகளிர் விடுதிகள் கட்டுவதற்காக இத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

2010ம் ஆண்டில் தலைவர் கலைஞர் அவர்கள், சத்துணவு பணியாளர், சமையலர் மற்றும் உதவியாளர் நியமனங்களிலும் 25 சதவீத பணியிடங்கள் கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்டோரை கொண்டு முன்னுரிமையின் அடிப்படையில் நிரப்பப்பட வேண்டும் என்று ஆணையிட்டார்கள்.  அதன் பின்னர் 10 ஆண்டுகளுக்கு பின்பு, தற்போது திராவிட மாடல் ஆட்சி நடத்தி வரும் மாண்புமிகு முதலமைச்சர் தளபதியார் அவர்களால் தான் அங்கன்வாடிப் பணியாளர், குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களில் 25 சதவீத பணியிடங்களை, கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்டோரை கொண்டு முன்னுரிமையின் அடிப்படையில் நிரப்பிட ஆணையிட்டுள்ளது என்பதை குறிப்பிட்டு சொல்ல விரும்புகிறேன்.  மேலும், இத்துறையின் பணியாளர்களுக்கு முறையான பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.  கருணை அடிப்படையிலான பணி நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன.  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர்கள், உதவி இயக்குநர்கள் என 99 பேர் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

மாநில மூத்த குடிமக்கள் கொள்கை உருவாக்கப்படும் என்று சென்ற ஆண்டு மானியக்கோரிக்கையில் தெரிவித்தவாறு, மாநில மூத்த குடிமக்கள் கொள்கை உருவாக்கிட வரைவுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. பல நிலைகளில் கலந்தாலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு மூத்த குடிமக்கள் வரைவு கொள்கை தயார் செய்யப்பட்டு பொது மக்களின் கருத்துக்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது.  அக்கருத்துக்கள் தொகுக்கப் பெற்று கொள்கை வெளியிடுவதற்கு இத்துறை நடவடிக்கை  எடுத்து வருகிறது. முதலமைச்சர் தளபதியார் பொறுப்பேற்ற பின்பு 26.08.2021 முதல் திருநங்கைகள் நல வாரியம் புதிய உறுப்பினர்களுடன் புத்துயிர் ஊட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது.  இதுநாள் வரை திருநங்கையர் சொந்த தொழில் தொடங்கிட தலா ரூ.50,000/- வீதம் மான்யமாக 141 திருநங்கைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.  திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், நவீன ரக தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.  திருநங்கைகளுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட திருநங்கைகள் கைபேசி செயலி (Mobile App) மூலம், திருநங்கைகள் தங்களைப் பதிவு செய்து இணைய வழி அடையாள அட்டை பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.  திருநங்கையர்களுக்கு குடும்ப அட்டை, இலவச வீட்டு மனை, மருத்துவ காப்பீட்டு அட்டை, சிறப்பு திருநங்கையர் மருத்துவ சிகிச்சைப் பிரிவு மற்றும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் வீடுகள் போன்ற சீரிய திட்டங்களும் இவ்வரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இத்துறை பெண்கள், முதியோர், குழந்தைகள் மற்றும் திருநங்கையர் பாதுகாப்பு மற்றும் நலனுக்கான பல்வேறு சட்டங்கள், அரசு திட்டங்கள், உதவி எண்கள், வளரிளம் பெண்கள், கர்ப்பிணி பெண்களுக்கான ஊட்டச்சத்திற்கு முக்கியத்துவம் ஆகியன பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தி வருகிறது.

அனைத்து சாதியினர்களிடையே சமூக நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமையினை நிலைநாட்டுவதற்காக தலைவர் கலைஞர் அவர்களால் 25.10.1999 அன்று தலைமைச் செயலக சமூக சீர்திருத்தத் துறை உருவாக்கப்பட்டது.  இத்துறையின் நோக்கங்கள் பெண்கள் உரிமையினை அடைவதற்கான திட்டங்களைத் தீட்டுதல், சமூக சீர்திருத்தக் கருத்துக்களை பரப்புதல், மத மற்றும் சமூக நல்லிணக்கம் ஏற்படுத்தல், மாணவர்களிடம் விஞ்ஞான பூர்வமான சிந்தனைகளை உருவாக்குதல் மற்றும் அறிவார்ந்த அணுகுமுறையினை வளர்த்திடுதல் ஆகும்.  தற்போது முதலமைச்சர் அவர்கள், சமூக நீதி அளவுகோல்கள் தமிழ்நாட்டில் சட்டப்படி முழுமையாக செயல்படுத்தப்படுகிறதா? என்பதைக் கண்காணித்திட இத்துறையில் சமூக நீதிக் கண்காணிப்புக் குழுவொன்று ஏற்படுத்தியுள்ளார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இத்துறை, திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வரும் முதலமைச்சர்வழிகாட்டுதலுடன் மகளிர், குழந்தைகள், திருநங்கைகள் மற்றும் மூத்தக் குடிமக்களின் சமூக நலன் மற்றும் சமூக நீதிக்காக தொடர்ந்து செயல்படும் என்பதை உறுதியுடன் கூறிக்கொள்கிறேன்.

Related Stories: