ரஷ்யா - உக்‍ரைன் போரால் வளரும் நாடுகளுக்‍கு பாதிப்பு!: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா கவலை..!!

ஜெனிவா: ரஷ்யா - உக்‍ரைன் போரால் வளரும் நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா கவலை தெரிவித்துள்ளது. . பிப்ரவரி 24 -ம் தேதி தொடங்கிய உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. உக்ரைனில் கடந்த ஏழு வாரங்களுக்கு மேலாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் இராணுவ வீரர்கள் ரஷ்யாவின் தாக்குதலுக்குப் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், உக்ரைனில் நிலவும் மனிதாபிமான நெருக்கடி குறித்து ஆலோசிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர துணை பிரதிநிதி ரவீந்திரா, இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைத்து பேசினார்.

ரஷ்யா, உக்ரைன் மோதல் விவகாரத்தில் இந்தியா ஆரம்பம் முதலே ஒரே நிலைப்பாட்டில் உள்ளதாகவும், இருதரப்பும் அமைதி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் அப்பாவி மக்களின் உயிர் ஆபத்தில் இருக்கும் போது பேச்சுவார்த்தை மட்டுமே தீர்வாக இருக்கும் என்றும் கூறினார். முன்பைவிட உக்ரைனின் தற்போதைய நிலவரம் மோசமாகி உள்ளதாகவும், குழந்தைகளும், பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்தியா தன்னால் இயன்ற நிவாரண உதவிகளை உக்ரைனுக்கு செய்து வருவதாகவும், இனியும் செய்யும் என்றும் குறிப்பிட்டார்.

Related Stories: