கொள்ளிடம் பகுதியில் வயல்வெளியில் ஆட்டுக்கிடை -விவசாயிகள் ஆர்வம்

கொள்ளிடம் : மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் சம்பா மற்றும் தாளடி அறுவடை முடிவுற்று பின்னர் உளுந்து பயறு அறுவடை தீவிரமடைந்து முடியும் தருவாயில் இருந்து வருகிறது. இந்நிலையில் அறுவடை முடிந்த வயலில் விவசாயிகள் பாரம்பரிய முறையிலான ஆட்டுக்கிடை போடும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மண்வள மேம்பாட்டிற்கு கால்நடை கழிவுகள் இயற்கை உரங்கள் அதிக விளைச்சல் கொடுக்கும் தன்மை வாய்ந்ததாக உள்ளன.

இதனால் பாரம்பரிய முறைகளில் தொழு உரமிடுதல் பசுந்தாள் உரமிடுதல் மிகவும் அவசியமான மற்றும் ஆரோக்கியமானதாகும். இதில் மண்ணின் வளத்தை மேம்படுத்துவதற்காக ஆட்டுக்கிடை போடும் பழக்கம் பாரம்பரிய முறையாக இருந்து வருகிறது. இந்த பாரம்பரிய ஆட்டுக்கிடை போடும் முறை மண்ணின் வளத்தை மேம்படுத்தும் முக்கிய காரணியாக இருந்து வருகிறது. பகலில் மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகள் இரவில் வயலில் கூட்டமாக தங்க வைப்பது ஆட்டுக்கிடை போடும் முறையாகும். இதன் மூலம் ஆடுகளின் கழிவுகளான சாணம், சிறுநீர் ஆகியவை வயல்களில் உரமாக சேகரிக்கப்படுகிறது. ஆடுகளின் சிறுநீரில் அதிக அளவில் பயிர் வளர்ச்சிக்குத் தேவையான சத்துக்கள் உள்ளன.

நெல், வாழை, கரும்பு மற்றும் மானாவாரி கரிசல் நிலத்திற்கும் ஆட்டுக்கிடை மிகவும் அவசியமாகிறது. ஆட்டு எருவில் தழை, மணி, சாம்பல் சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆட்டுக் கிடை போடுவதால் மண்ணில் நீர் பிடிப்புத்திறன், மண்ணின் நயம், மண்ணின் காற்றோட்டம், மண்ணின் அடர்வு, மண்ணின் செழிப்பு தன்மை மேம்படுகின்றன. மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் பாதுகாக்கப்படுவதுடன் அதன் செயல்பாடுகள் அதிகரிக்கின்றன. ஆட்டுக்கிடை போடுவதன் மூலம் வயலுக்கு உரஙகள் எடுத்துச் சென்று போட தேவையில்லை.

குறைந்த செலவில் பயிர் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கின்றன. மேலும் பயிர் வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கும் களைகளை கட்டுப்படுத்துகின்றன. சத்துக்கள் அனைத்தும் உடனடியாக பயிருக்கு கிடைக்கின்றன. எனவே பாரம்பரியமிக்க இந்த ஆட்டு கிடையை பயன்படுத்தி மண்ணின் தன்மையை மேம்படுத்த வேண்டும் என்று ஆட்டு கிடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் ஆட்டுக்கிடை உரிமையாளர்கள் கூறுகையில். ராமநாதபுரம் பகுதியிலிருந்து நாங்கள் ஒவ்வொரு பகுதியாகச் சென்று ஆடுகளை மேய்த்து வருகிறோம். அப்படி வரும்போது தற்போது மயிலாடுதுறை மாவட்ட பகுதிகளில் அறுவடை செய்த நிலங்களில் ஆட்டுக்கிடை போட்டு வருகிறோம். ஆட்டுக்கிடை போடுவதற்கு இது சரியான தருணமாக உள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அதிக எண்ணிக்கையில் ஆடுகள் சீர்காழி கொள்ளிடம் மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளுக்கு ஓட்டி வந்து மேய்ச்சலுக்காக பயன்படுத்தி வயல்களில் ஆட்டுக் கிடை போட்டு வந்தோம்.

காலப்போக்கில் ஆட்டுக்கிடை அமைப்பதில் பல சிரமங்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது ஆடு மேய்ப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. போதிய வருவாய் கிடைப்பதும் சிரமமாக உள்ளது. சில இடங்களில் ஆடுகள் மேய்ச்சலுக்கு வாய்ப்பு இல்லாமலும் சில இடங்களில் அவைகள் குடிப்பதற்கு தண்ணீர் கூட இல்லாமல் இருக்கின்றன. இவைகளயெல்லாம் சமாளித்து பல சிரமங்களுக்கு இடையே இரவு நேரங்களில் நாய், நரி போன்ற விலங்குகளிடமிருந்தும் ஆடுகளை கண்விழித்து பாதுகாத்து வருவதில் அதிக சிரமம் இருந்து வருகிறது. போதிய வருவாய் கிடைப்பதிலும் சிரமம் உள்ளது.

இதனால் ஆட்டுக்கிடையை மேம்படுத்தும் வகையில் ஆட்டுக்கிடை உரிமையாளர்களுக்கு ஆடு மேய்ப்பவர்களுக்கும் அரசு உரிய நிவாரணம் வழங்குவதுடன் அவர்களின் வாழ்வாதாரத்துக்கு உரிய வழிவகை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். திடீரென இறக்கும் ஆடுகளுக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கூறினர்.

Related Stories: