பாஜவும், அதனை சார்ந்த அமைப்புகளும் வகுப்புவாத எண்ணங்களை மக்களிடம் விதைக்கின்றன: சரத் பவார் கவலை

மும்பை: பாரதிய ஜனதாவும் அதனை சார்ந்த அமைப்புகளும் நாட்டு மக்களிடையே வகுப்புவாத எண்ணங்களை பரப்புவதாகவும் இது கவலை அளிப்பதாகவும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தெரிவித்தார். ராமநவமி, அனுமன் ஜெயந்தி விழாக்களின்போது குஜராத், டெல்லி, மத்திய பிரதேசத்தில் கலவரங்கள் நடைபெற்றன. மகாராஷ்டிராவில் மசூதிகளில் இருந்து ஒலிபெருக்கிகளை மே மாதம் 3ம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்றும் இல்லையென்றால் மசூதிகள் முன்பாக ஒலிபெருக்கியில் அனுமன் சாலிசா ஒலிபரப்படும் என்றும் கூறிய மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரேவுக்கு பாரதிய ஜனதா ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இது குறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், டிவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

 பாரதிய ஜனதாவும் அதனை சார்ந்த அமைப்புகளும் நாட்டில் வகுப்புவாதத்தை விதைக்கின்றன. இது கவலை அளிக்கிறது. அதே நேரத்தில், மக்களிடையே ஒற்றுமையை உருவாக்கி அமைதியை ஏற்படுத்தும் முயற்சியில் தேசியவாத காங்கிரஸ் முன்னின்று செயல்படுகிறது.

பொதுமக்களை பாதிக்கும் பெட்ரோல், டீசல், காஸ், சமையல் எண்ணெய் விலை அதிகரிப்பு தொடர்பான பிரச்னைகளுக்கு எங்கள் கட்சி முன்னுரிமை வழங்குகிறது. பாரதிய ஜனதாவுக்கு எதிரான அரசியல் கட்சிகளிடையே கூட்டணியை உருவாக்க பல தலைவர்கள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். இது பற்றி மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் மூலமாக எனக்கு தகவல் தெரிவித்துள்ளார். நானும் முதல்வர் உத்தவ் தாக்கரேயும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் எதிர்பார்க்கிறார்.

 நாங்கள் இருவரும் மற்ற தலைவர்களுடன் பேசிய பின்னர் இறுதி முடிவை எடுப்போம். தேசியவாத காங்கிரஸ் கட்சி பலவீனமாக இருக்கும் மாநிலங்களில் 2023ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள கர்நாடகாவும் ஒன்று. கர்நாடகாவில் கட்சியை பலப்படுத்துவதற்காக எங்கள் கட்சியினர் அந்த மாநிலத்துக்கு செல்ல இருக்கின்றனர். இவ்வாறு சரத் பவார் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே,  ஒலி பெருக்கியை பயன்படுத்தும் விஷயத்தில் சட்டம் முழுமையாகவும் கடுமையாகவும் அமல் செய்யப்படுவதோடு, சுப்ரீம் கோர்ட்டின் நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று போலீசாருக்கு மகாராஷ்டிரா மாநில போலீஸ் டிஜிபி ரஜ்னீஷ் சேத் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: