தர்மபுரி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழையால் 2 டன் மாம்பிஞ்சு உதிர்ந்தது: விவசாயிகள் கவலை

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் நேற்று முன்தினம், சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்ததால், சுமார் 2 டன் மா பிஞ்சுகள் மற்றும் மாங்காய்கள் உதிர்ந்தன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். மேலும் 80 மின்கம்பங்கள் சாய்ந்ததால், பல இடங்களில் மின்சாரம் தடைபட்டது. கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் வெப்பச்சலனம் காரணமாக, தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு இடி,மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. சில இடங்களில் மாட்டு கொட்டகை, வீட்டின் சிமெண்ட் சீட் மேற்கூரைகள், மின்கம்பங்கள், சூறாவளி காற்றுக்கு உடைந்தும், தூக்கி வீசப்பட்டும் சேதமடைந்துள்ளது. மரங்கள் ஆங்காங்கே சாய்ந்தன. வெற்றிலைக்காரன் பள்ளத்தில் மழையால் வீடுகள் சேதமடைந்துள்ளது.

அதேபோல், காரிமங்கலம், பாலக்கோடு, மொரப்பூர், தர்மபுரி, பென்னாகரம், நல்லம்பள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் ஆகிய பகுதிகளில், தற்போது விளைச்சலுக்கு வந்துள்ள மாங்காய் மற்றும் பிஞ்சுகளை பாதுகாக்க விவசாயிகள் நடவடிக்கை எடுத்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை மாரண்டஅள்ளி, ஜக்கசமுத்திரம், மகேந்திரமங்கலம், ஜிட்டாண்டஅள்ளி, மல்லுப்பட்டி, வெள்ளிச்சந்தை உள்ளிட்ட இடங்களில் சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இதில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 2 டன் மாங்காய், மா பிஞ்சுகள் உதிர்ந்தன. உதிர்ந்த மாங்காய்களை சேகரித்து வெள்ளிச்சந்தை, ராயக்கோட்டை மண்டியில் மிகக் குறைந்த விலைக்கு விற்றனர். மாவட்டத்தில் நடப்பாண்டு மா விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நல்ல விலை கிடைக்கும் என எதிர்பார்த்த விவசாயிகள், மிகவும் கவலையடைந்துள்ளனர்.

எனவே, அரசு மாவிற்கு ரகம், தரத்திற்கு ஏற்ப குறைந்தபட்சம் ஒரு விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே, மாவட்டத்தில் நேற்று காலை வரை பதிவான மழை அளவு விபரம்(மில்லி மீட்டரில்): பாலக்கோடு-38.40, மாரண்ட அள்ளி -22, பென்னாகரம் - 20, ஒகேனக்கல் - 12.40, தர்மபுரி -10, பாப்பிரெட்டிப்பட்டி - 5.60, அரூர் - 2 மில்லி மீட்டர் பதிவானது. பாலக்கோடு: பாலக்கோடு, வெள்ளிச்சந்தை, மாரண்டஅள்ளியில் சூறைக்காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழைக்கு, மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. கொலாசணஅள்ளியில் ரூபன் - கோவிந்தம்மாள் தம்பதியின் ஓட்டு வீடு, மாதேஸ் - கரட்மீன் தம்பதியின் கூரை வீட்டின் மீதும் புளியமரம் சாய்ந்து வீட்டின் ஓடுகள் மற்றும் சுவர்கள் சேதமடைந்தன. அதேபோல் ஜக்கசமுத்திரம் பகுதியில் நேற்று சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால் ஜக்கசமுத்திரம், பொம்மனூர், மகேந்திரமங்கலம், கொலசணஅள்ளி பகுதிகளில் மின்கம்பங்கள் உடைந்து சேதமடைந்தன. உதவி பொறியாளர் அருள்முருகன் தலைமையில் வந்த ஊழியர்கள், 3 மணி நேரத்தில் மின்கம்பங்கள் சரிசெய்து, மின்சாரம் வழங்கியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

80 மின்கம்பங்கள் சேதம்

தர்மபுரி மாவட்டத்தில் வெண்ணாம்பட்டி, கடத்தூர், ஜக்கசமுத்திரம், பொம்மிடி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம், மழையின் போது சூறைக்காற்று வீசியதில் 80க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்து சேதமடைந்தன. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. நேற்று காலை, மின்வாரிய அதிகாரிகள் ஊழியர்களுடன் வந்து சேதமடைந்த மின்கம்பங்களை சீர்செய்யும் பணியில் துரிதமாக ஈடுபட்டனர்.

Related Stories: