மீண்டும் சுட்டெரிக்கும் வெயில் அகஸ்தியர் அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

வி.கே.புரம்: மீண்டும் வெயில் சுட்டெரிக்கும் நிலையில், தொடர் விடுமுறை காரணமாக பாபநாசம் அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. குற்றாலம் மெயினருவியிலும் ஓரளவு தண்ணீர் விழுவதால் மக்கள் கூட்டம் காணப்பட்டது. நெல்லை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் பல அருவிகள் உள்ளன. இதில் களக்காடு பகுதியில் உள்ள அருவிகளில் மழை காலங்களில் மட்டுமே தண்ணீர் விழும். அருவிகள் நகரமான குற்றாலத்தில் சீசன் காலங்களிலும், மலை பகுதியில் மழை பெய்தால்தான் அருவிகளில் தண்ணீர் கொட்டும். ஆனால் பாபநாசம் மலையிலுள்ள அகஸ்தியர் அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் விழும். இதனால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.

தற்போது கோடை வெயில் சுட்டெரித்தாலும், அகஸ்தியர் அருவியில் தண்ணீர் குறைவின்றி கொட்டுகிறது. கடந்த வாரத்தில் ஓரிரு நாட்கள் மழை பெய்து மக்களை குளிர்வித்த நிலையில், கடந்த 2 நாட்களாக வெயில் அனலாய் தகிக்கிறது. இதனால் வெயில் உஷ்ணத்தை தணிப்பதற்காக அகஸ்தியர் அருவியில் குளித்து மகிழ சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். கடந்த 4 நாட்களாக தொடர் விடுமுறை என்பதால், நெல்லை மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அகஸ்தியர் அருவிக்கு ஏராளமானோர் படையெடுத்து உள்ளனர். இதனால் அருவி பகுதி முழுவதும் மக்கள் கூட்டமாக காணப்பட்டது. குடும்பம், குடும்பமாக சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்து திரும்பினர்.

முன்னதாக பாபநாசம் வனச்சோதனை சாவடியில் வாகனங்கள் அனைத்திலும் சோதனை செய்து பிளாஸ்டிக் பொருட்கள், மதுபானங்களை வனத்துறையினர் பறிமுதல் செய்து அழித்தனர். அகஸ்தியர் அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளிடம் தலா ரூ.30 வசூலிக்கப்பட்டது. இதேபோல் காருக்கு ரூ.50, பஸ்சுக்கு ரூ.100, பைக்குகளுக்கு ரூ.20ம் கட்டணமாக வசூலிக்கப்பட்டது.குற்றாலம் மேற்குத் ெதாடர்ச்சி மலையிலும் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக மெயினருவியில் ஓரளவு தண்ணீர் வரத்து உள்ளது. தொடர் விடுமுறை மற்றும் கோடை வெயிலை சமாளிக்க குற்றாலத்திலும் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அருவியில் ஆறுதலாக விழுந்த தண்ணிரில் குளித்து மகிழ்ந்தனர்.

Related Stories: