கொரட்டூர் பகுதியில் நள்ளிரவில் திடீர் சோதனை வாகனத்தில் கடத்திய 106 ஆவின் பால் பாக்கெட் பறிமுதல்: அமைச்சர் ஆவடி நாசர் அதிரடி; துறை நடவடிக்கைக்கு உத்தரவு

சென்னை: சென்னை அம்பத்தூரில் உள்ள ஆவின் தொழிற்சாலைக்கு திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, ஈரோடு, கிருஷ்ணாகிரி, சேலம், வேலூர், தர்மபுரி, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், செஞ்சி, திண்டுக்கல், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து நாளொன்றுக்கு சுமார் 4 லட்சம் லிட்டர் கொள்முதல் செய்யப்படுகிறது. அவை வாகனம் மூலம் சென்னை அம்பத்தூர் ஆவின் ஆலைக்கு கொண்டு வரப்படுகிறது. பின்பு பால் மொத்தமாக பதப்படுத்தி பல்வேறு வகையில் பால், தயிர், மோர், ஐஸ் கிரீம், பால் பவுடர் என தயாரிக்கப்படுகிறது.

இதில், உற்பத்தியாகும் பால் பாக்கெட்டுகள் மட்டும் சென்னை மற்றும் சுற்றுவட்டார மக்களின் தேவைக்கு ஏற்ப வாகனங்களில் ஏற்றி அனுப்பி வைக்கின்றனர். இந்நிலையில் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் திடீர் திடீரென ஆவின் நிறுவனங்கள், முகவர்கள், பார்லர்களுக்கு சென்று சோதனை நடத்தி வருகிறார். அங்கு உள்ள குறைபாடுகளை பொதுமக்களிடம் கேட்டு தீர்த்து வைக்கிறார். இந்நிலையில் அம்பத்தூர் பால் தொழிற்சாலையில் இருந்து சுமார் 85 வாகனங்களில் அம்பத்தூர், கொரட்டூர், ஆவடி, முகப்பேர், பாடி, கொளத்தூர், வில்லிவாக்கம் டப்புகளில் ஆவின் பால் பாக்கெட்டுகளை ஏற்றிக் கொண்டு2 வாகனங்கள் கொரட்டூர் வழியாக சென்று கொண்டிருந்தது. வாகனம் கொரட்டூர் பகுதியில் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு வந்தது.

அப்போது அமைச்சர் நாசர், அதிகாரிகள், காவல் துறையினர் வாகனத்தை மடக்கி நிறுத்தி, ஆய்வு செய்தனர். அந்த வகையில் இரண்டு லோடு வாகனத்தில் 106 பால் பாக்கெட்டுகள் கூடுதலாக எடுத்துச்செல்லப்பட்டது கண்டறியப்பட்டது. அதன் மதிப்பு ரூ.2,484 என்று கூறப்படுகிறது. அம்பத்தூர் ஆவின் பண்ணையில் கடந்த 6 நாட்களாக ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்யும் பணியாட்கள் வேலைக்கு வருவதில்லை. இதனால் பால் உற்பத்தி செய்து வினியோகஸ்தர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்களுக்கு அனுப்புவதில் தாமதம் ஏற்படுவதாக புகார் வந்தது. ஆட்கள் பற்றாக்குறை காரணமாக தவறு ஏற்பட்டதா அல்லது இப்படி தான் தினந்தோறும் பால் பாக்கெட்டுக்களை கணக்கில் காட்டாமல் கள்ளச்சந்தையில் அதிகாரிகள் விற்கிறார்களா என்று அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். மேலும் துறைரீதியான விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக  அமைச்சர் கூறினார்.

Related Stories: